Jayalalithaas house should not be remembered
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா, 1991 - 96 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழக முதலமைச்சர் பதவியை வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 66 கோடிக்கு சொத்துக்களை குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக 18 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்றவர்களுக்கு 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அனைவரையும் 2015 ஆம் ஆண்டு விடுதலை செய்தார். முடக்கப்பட்ட 6 நிறுவனங்களையும் குமாரசாமி விடுவித்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் ஜெ உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளி என நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. ஜெ இறந்துவிடவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
இதனிடையே ஜெ இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது என கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
