போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது.என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தீபா. இந்த வழக்கு நீதிபதி முன்பு வந்தபோது ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார் என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம் விசாரணையை இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது. பின்னா், இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது.மேலும், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துகளையும் அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வழக்குத் தொடா்ந்தார்.இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தார்.

 அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் ஜி.ஜெ.பாஸ்கா் நாராயணன், சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து, அந்த இழப்பீட்டை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தி வட்டார வருவாய் அலுவலா் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை.அதுமட்டுமல்ல தனியாரின் சொத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. அரசு நினைவிடமாக மாற்றுவதற்கு வேதா நிலையம் ஒன்றும் பொதுச் சொத்து கிடையாது என வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரரும், அவரது தம்பியும்அறக்கட்டளை தொடங்கி, ஜெயலலிதாவின் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நலப்பணிகளை மேற்கொள்ள உயா்நீதிமன்ற இருநீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது என வாதிட்டார்.


போது குறுக்கிட்ட நீதிபதி, மனுதாரா்கள் பிற சொத்துகளை விற்பனை செய்து நலப்பணி செய்வார்கள். ஆனால் வேதா நிலையத்தை தங்களுக்கு வேண்டும் என கூறுகின்றனா். இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே ஜெ.தீபக் தொடா்ந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமா்வுக்கு பரிந்துரை செய்துள்ளேன். எனவே இந்த வழக்கையும் அதே அமா்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்வதாக தெரிவித்தார் நீதிபதி.

 அப்போது மனுதாரா் தரப்பில் வழக்கை இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்கும் வரை, இழப்பீடு தொகையை நிர்ணயித்த வட்டார வருவாய் அலுவலா் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா எங்கு வசித்தார் என கேள்வி எழுப்பினார். அப்போது மனுதாரா் தரப்பில், ஜெயலலிதா முதல்வராவதற்கு முன்பு வரை அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து பின்னா் தான் பிரிந்துள்ளனா் என தெரிவித்தார். இதனையடுத்து விசாரணையை இரு நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்.