கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியவர்.
கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் மீது குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி;- உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அதிமுக உறுப்பினரும் உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான அன்பழகன், ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாகத் தெரிவித்து உரையாற்றினார்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், மீண்டும் அதே பெயரில் செயல்பட வேண்டும் என்றும் அன்பழகன் கோரிக்கை வைத்தார். ஆனால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற செய்தியைச் சொன்னார். அதனைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் ஆரம்ப பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியவர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். துணைவேந்தர், சிண்டிகேட் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டனர். ஜெயலலிதா பெயர் தாங்கி கொள்ள முடியாத காரணத்தினால், அண்ணாமலை பல்கலையோடு ஜெயலலிதா பல்கலைகழகம் இணைக்கப்படுகிறது.

இது நிச்சயம் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே செய்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஏழை எளியோர்கள் குறைந்த கட்டணத்தில் உண்ண வேண்டும் என்பதற்காகவே அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதைக்கூட மூடுவேன் என சொல்வது ஏழை மக்களை வஞ்சிப்பதாகதான் தெரிகிறது என கூறியுள்ளார்.
