Jayalalithaa said she was the biggest asset in her entire life

ஜெயலலிதா தன் வாழ்நாளில் சேர்த்து வைத்த சொத்துக்களிலேயே பெரிய சொத்தாக அவர் சொல்லிக் கொண்டது, ‘திருமணமே செய்து கொள்ளாமல், தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ளாமல் தமிழக மக்களையே தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்காகவே வாழ்பவர் நம் அம்மா’ என்று அவர் கட்சியின் நிர்வாகிகள் உருகிப் பேசிய வார்த்தைகளைத்தான். 

ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் முதல் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பு, பிளந்து நொறுங்கிய கழகம், பி.ஜே.பி.யிடம் மண்டியிட்டு கிடக்கும் நிலை, கழக ரகசியங்களை பொதுமேடையில் பந்திவைக்கும் நிர்வாகிகள், தன் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையிலேயே தான் வாழ்ந்த இல்லத்தில் ரெய்டு என்று எவ்வளவோ அசெளகரியங்கள் அவருக்கு நேர்ந்துவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்தான் முதல் குற்றவாளி என்பதை கூட யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ள தயாரில்லை. 

ஆனால் அதையெல்லாம் தாண்டி அவருக்கு அவமானமென்று ஒன்று நடந்திருக்கிறதென்றால் அது ‘நான் தான் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள். இதை நிரூபிக்க என் அம்மாவின் உடலை தோண்டியெடுத்து டி.என்.ஏ. டெஸ்ட் செய்யுங்கள்.’ என்று பெங்களூருவை சேர்ந்த அம்ருதா எனும் இளம்பெண் உச்சநீதிமன்றம், குடியரசு தலைவர், பிரதமர் என்று கோரிக்கை வைத்தார்.

உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்த கையோடு ‘கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு அணுகலாம்.’ என்று அறிவுறுத்தியது. 

அம்ருதா பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் கதவை எப்போது தட்டப்போகிறார் என்று தெரியாமல் தேசிய அரசியலரங்கமே விழி விரித்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 

ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிடும் வாய்ப்பு மிக அதிகமே அப்படி உத்தரவிடப்பட்டால்...முதலில் ஜெயலலிதாவின் இரத்த மாதிரியை, அம்ருதாவின் ரத்த மாதிரியோடு ஒப்பிட்டு பார்க்கும் சோதனை நடைபெறும்.

அடக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகிவிட்ட ஜெயலலிதாவின் உடலில் இரத்தம் எப்படி இருக்கும்? என்கிற கேள்வி எழலாம். அப்பல்லோவில் நிச்சயம் அவரது ரத்த மாதிரி இருக்கும், இருக்க வேண்டும். அங்கிருந்து அவற்றை பெற்று ஒப்பிட்டு பார்ப்பார்கள். 

ஒருவேளை இரத்த மாதிரி கிடைக்கவில்லை என்றால் மட்டுமே உடலை தோண்டி எடுக்கும் சூழல் உருவாகலாம். அப்படி எடுக்கப்பட்டால் ஜெயலலிதாவின் எலும்பில் உள்ள மஜ்ஜையை எடுத்து சோதனைக்கு உட்படுத்தி, அம்ருதாவின் உடலில் உட்கூறுகளையும் அதனோடு பொருத்திப் பார்த்து முடிவு காண்பார்கள். 

ஆனால் இது மிக சாதாரணமாக நடந்துவிடும் பிராசஸ் இல்லையாம். டி.என்.ஏ. சோதனை நடத்தும் வசதி ஐதராபாத், டெல்லியில் இருந்தாலும் லண்டனுக்கு அனுப்பித்தான் அதை உறுதிப்படுத்த முடியுமாம். 
ஆக இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் இதை கோர்ட் ஏற்குமா என்பது பெரிய கேள்விக்குறியே.

மேலும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுப்பது என்பது, அவரை அவமதிக்கும் செயல் என்று சொல்லி அ.தி.மு.க.வின் பல லட்சம் தொண்டர்கள் ஆர்பாட்டம், போராட்டம் என்று இறங்கி தமிழகமே களேபரப்படும் சூழலும் உருவாகலாம். எனவே இது நடத்தப்படுமா? என்று மீண்டும் கேட்கும் சூழலே உருவாகியுள்ளது. 

ஆனால் அதேவேளையில் மத்திய அரசாங்கம் நினைத்தால் சட்ட அனுமதியுடன் தனது தேச எல்லைக்குள் எதையும் நடத்திவிடும் அதிகாரமும், அனுமதியும், தார்மீக உரிமையும் இருக்கும் பட்சத்தில் அவசியப்பட்டால் ஜெயலலிதாவின் கல்லறையானது உடைத்து திறக்கப்படும் என்றே தெரிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

ஜெயலலிதாவுக்கு எல்லாமே நாங்களே! என்று சொல்லிக் கொண்டு சசிகலா, தினகரன் டீம் போடும் சீன்களில் ஏக எரிச்சலில் இருக்கும் மோடி அரசு இவர்களின் ஆட்டத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக கூட அம்ருதா தன்னை நிரூபித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது.
ஆனாலும் ஜெ.,வின் கல்லறை திறக்கப்படலாம்! என்பதை நினைக்கும்போதே திகிலாக இருக்கிறது.