முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமிக்குள் புகுந்துள்ளதால்தான் அவரைப்போல அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு தொகுதி முழுவதும் அமைச்சர்கள் வலம் வந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு கேடிசி நகர் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேடிசி நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய  ஆர்.பி.உதயகுமார் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளரை 50 ஆயிரம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

மேலும், பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இலவச சைக்கிள் போன்ற நலத்திட்டங்களை தொடர முடியுமா என அனைவரும் கேள்வி எழுப்பினர். ஆனால் ஜெயலலிதாவின் வேகம், ஆற்றல் என்று எல்லோரும் பேசும் வகையில் செய்து காட்டியவர்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி மேல் புகுந்ததால் ஜெயலலிதாவை போல அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். 

திமுக விளம்பர பதாகைகளில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி படம் இல்லாமல், ஸ்டாலின், உதயநிதி படங்கள் மட்டுமே இருப்பதாக விமர்சித்தார். மேலும், அப்பா - மகன் என மன்னாராட்சிக்கு இடமளிப்பது போல திமுகவின் செயல்பாடு உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.