ராஜீவ் வழக்கில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலையில் பிரதானமாக பேசப்படுகிறது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-வது பிரிவும்தான். 7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்பது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச்சின் நேற்றைய தீர்ப்பு. அதாவது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு தண்டனை கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை உள்ளது. அதனடிப்படையில் விடுதலை செய்யலாம் என்பதுதான் தீர்ப்பு. 

 

இது தொடர்பான விவாதங்களில் 7 தமிழரையும் விடுதலை செய்ய 2014-ல் முடிவெடுத்த முதல்வராக இருந்த ஜெயலலிதா, 161-வது பிரிவை பயன்படுத்தி இருக்கலாமே? அதை ஏன் அவர் பயன்படுத்தவில்லை? அரசியல் நாடகம் என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்ட விவகாரங்களை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள். அப்போது நடந்தது இதுதான்!

2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தார். அதில், பேரறிவாளன், முருகன், சாந்தனின் கருணை மனுக்கள் மீது 11 ஆண்டுகாலம் கழித்து தாமதமாக ஜனாதிபதி முடிவெடுத்ததால் அவர்களது தூக்கு ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் சிறை தண்டனையாக குறைக்கப்படுகிறது என கூறியிருந்தார். அதே தீர்ப்பில் நீதிபதி சதாசிவம் மற்றொரு அம்சத்தையும் எழுதியிருந்தார். அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-வது பிரிவின் படி இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் என்பதுதான் அது. 

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432 பிரிவானது 

432. Power to suspend or remit sentences.

(1) When any person has been sentenced to punishment for an offence, the appropriate Government may, at any time, without Conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced.

(2) Whenever an application is made to the appropriate Government for the suspension or remission of a sentence, the appropriate Government may require the. presiding Judge of the Court before or by which the conviction was had or confirmed, to state his opinion as to whether the application should be granted or refused, together with his reasons for such opinion and also to forward with the statement of such opinion a certified copy of the record of the trial or of such record thereof as exists.

என பல உட்பிரிவுகளைக் கொண்டது.

அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ போன்ற ஏஜென்சிகள் விசாரித்த வழக்குகளில் தண்டனை கைதிகளை மாநில அரசு விடுவிப்பதற்கு முன்னர் மத்திய அரசின் ஒப்புதல் அல்லது ஆலோசனையைப் பெற வேண்டும் என்பதுதான் இந்த குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-வது பிரிவின் சாராம்சம். இதில்தான் அதாவது மத்திய அரசின் ஆலோசனை தேவையா? ஒப்புதல் தேவையா? என்கிற வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் பெஞ்ச், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432-ன் கீழ் முடிவெடுக்கலாம் என கூறியதால்தான் 19.02.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா 7 தமிழர் விடுதலை அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் தமிழக அரசின் முடிவு மத்திய அரசின் கருத்துக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் அதற்கு மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர் என்றும் ஜெயலலிதா அறிவித்தார். 

தமிழக அரசின் முடிவு குறித்து யெஸ் ஆர் நோ என்று சொல்ல வேண்டிய மத்திய அரசு தனிநபர்களைப் போல உச்சநீதிமன்றத்துக்கு போய் ரிட் மனுத் தாக்கல் செய்துவிட்டது. இந்த ரிட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. பின்னர் தண்டனை குறைப்பு அதிகாரம் மத்திய அரசுக்கா? மாநில அரசுக்கா? என்கிற வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச் 2015-ல் அளித்த தீர்ப்பில், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்கிற தீர்ப்பை கொடுத்தது. ஆனால் 7 தமிழர் விடுதலை தொடர்பாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கும் என ஒதுங்கிக் கொண்டது. தற்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச், 7 தமிழரை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்கிற தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் தற்போது அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் தமிழக அரசு 7 தமிழரையும் விடுதலை செய்ய முடியும்.