முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். அம்மா பேரவை தலைவர் ஜெ.தீபா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உங்களால் நான்; உங்களுக்காகவே எனும் முழக்கத்தோடு, தமிழகம் முழுவதும்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம், தென்னுர் உழவர் சந்தை மைதானத்தில், நடைபெற்ற எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெ.தீபா கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, அம்மா ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், தமிழக மக்களுக்கு நடந்து வரும் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார் என்றார். இப்படியான சூழலில் தமிழகம் சிக்கியிருக்காது. தமிழக அரசு கடந்த இரண்டு வருடங்களாக எப்படி செயல்படுகிறது என்பதை கவனியுங்கள். மத்திய அரசின் தலையீட்டோடுதான் அரசாங்கம் நடக்கிறது. ஓ.பி.எஸ்., - ஈ.பி.எஸ் அரசு மத்திய அரசின் துணையோடு, கைக்கூலி அரசாக இயங்கி வருகிறது. 

வெள்ளையர் காலத்தில் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தோமோ, இப்போது அனுபவிக்கிறோம். மத்திய ஆளும் அரசு, அடிமை ஆட்சியை செயல்படுத்தி வருவது துயம். இப்படி ஒரு ஆட்சி தேவையா?, சென்னையில் திறக்கப்பட்ட சிலை யாரோ ஒருவருது சிலை. அதனை அம்மா சிலை என்கிறார்கள். எனவே இந்த அடிமை ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். 

தமிழக மக்கள் ஆட்டு மந்தைகள் இல்லை. பல நாடகங்கள் நடத்தலாம் தவிர நீண்டநாள் செயல்படுத்த முடியாது. அவர்கள் வழியில் செல்லும் நான் தொடங்கியுள்ள லட்சியப் பயணம் நிச்சயம் தொடரும். என் பயணத்தில் நீங்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன். அ.தி.மு.கவின் அங்கமாகச் செயல்பட்டு வந்த இந்தப் பேரவை விரைவில் மக்களுக்கான இயக்கமாக, கட்சியாக மாற்றப்படும் என்றார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணைக்குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் என்னதான் கண்டுபிடித்தார். அதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அம்மாவின் மரணத்தை தெளிவுபடுத்த அரசு தவறி விட்டது. மக்களிடம் கொண்டு செல்வதுடன், அத்தையின் மரணத்தின் உண்மையை அறிய சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஜெ.தீபா கூறினார்.