பவுடர் பூசப்பட்ட பெளர்ணமி போல் பளீர் வெண் நிறத்துடன், தகதகாய நிலவாக ஜெயலலிதாவின் முகத்தை நேரில் பார்ப்பதற்கு பல லட்சக்கணக்கான மக்கள் தவமிருந்தது ஒரு காலம். அ.தி.மு.க.வின்  மாநில தலைமை நிர்வாகிகளுக்கே அவரது முகத்தைக் கண்டால் பயம் பாதி, பரவசம் மீதி என்று உடல் அதிரும். 

தங்க தாரகையே வருக வருக வருக! இம்மண்ணின் தேவதையே வருக வருக வருக!’ என்று... பொதுக்கூட்ட மேடைகளிலும், அரசு மற்றும் கழக விழாக்களிலும் பாடல் ஒலிக்கிறதென்றால் மேடையில் அந்த பெண் நிலவு தோன்றுகிறது என்று அர்த்தம். அந்தப் பாடல் தரும் புல்லரிப்புடன், மேடையில் நிற்கும் ஜெயலலிதாவை பார்க்கும் நொடிகள் பெரும் பரவசமானவை. அ.தி.மு.க.வை அடியோடு வெறுக்கும் பத்திரிக்கையாளர்களும் கூட, நிகழ்ச்சியை கவர் செய்யும் கடமையுணர்வோடு அங்கு நிற்பார்கள். 

அவர்களும் கூட இந்த இசையையும், ஜெயலலிதாவின் வருகையையும் ஒரு  சேர கண்டு, கேட்கும்போது சற்றே சிலிர்த்துப் போவார்கள் ‘ச்சே! எப்பேர்பட்ட ஆளுமையடா?’ என்று அப்பேர்ப்பட்ட தகதகாய ஜெயலலிதா இந்த மண்ணை விட்டுச் சென்று இன்றோடு இரண்டு ஆண்டுகள். தமிழ் திரையுலகம் தன் கலைமகளையும், தமிழகம் தன்  திருமகளையும் இழந்த நாள் இது! ’அம்மா வழியில் நடைபெறும் ஆட்சி’ என்று சொல்லிக் கொள்ளும் எத்தனை பேர் அவரது நினைவை இன்று நினைத்துக் கண் கலங்குகின்றனரோ தெரியவில்லை. 

ஆனால் ஜெயலலிதாவின் காலடி பூனைக்குட்டியாக வலம் வந்த அவரது உதவியாளர் பூங்குன்றன் பெரிதாய் நினைத்து வருந்துகிறார். ஒரு வீடியோ மெசேஜும் வெளியிட்டு தானும் கலங்கி, அதைக் காண்பவரையும் கண் கலங்க வைத்துள்ளார். 

அந்த வீடியோவின் இறுதியில்...”உன் சிம்மக்குரலில் ’பூங்குன்றன்’ என்று கூப்பிட மாட்டாயா? கனவிலாவது கூப்பிடம்மா, ஆறுதல் கொள்கிறேன். நேற்றிருந்தாய், இன்றில்லை, நாளை வருவாய் என காத்திருக்கிறோம்.” என்று நிறைவேறாத நம்பிக்கையுடன் முடிக்கிறார். ஜெயலலிதா மீண்டும் வரவேண்டும்! என்று சிலரை தவிர பலரும் இங்கே விரும்புகிறார்கள். ஏன், தி.மு.க. அனுதாபிகளும் கூட விரும்புகிறார்கள். அதன் உள்ளர்த்தம் உலகுக்கே தெரியும். வாம்மா!