ஜெயலலிதா வழியை பின்பற்றி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்டு மாபெரும் பெற்றி பெறும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அமமுக சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்த வேனில் சென்று மக்களை சந்தித்தார். அவருடன் பரமக்குடி தொகுதியில் வெற்றிபெற்று தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையாவும் கைகூப்பியபடி ஜீப்பில் சென்றார். 

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த மக்களைத் தேர்தலில் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப்போல், அவரது வழியைப் பின்பற்ற அமமுகவும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும், ராகுல்காந்தியைப் பிரதமராக்குவோம் என இங்கே கூறிவிட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவரது நிலைப்பாட்டை சாணக்கியத்தனம் என்கின்றனர். மக்கள் தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார். 

தற்போது கோடநாடு சம்பவம் தொடர்பான வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு அவர் பயப்படாமல் விசாரிக்கட்டும் என சொல்ல வேண்டும். ஆனால் அவர் அதை விட்டுவிட்டு பதட்டப்படுகிறார், அஞ்சுகிறார்.

இது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.