திருவள்ளூர் அருகே அனுமயின்றி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிலையை இரவோடு இரவாக அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று. ஜெயலலிதாவின் பிறந்தநாள் அதிமுகவினரால் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் நமது அம்மா நாளிதழும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் என்பவர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் கிராமத்தில் ஜெயலலிதாவின் சிலையை இன்று திறக்க திட்டமிட்டிருந்தார். அதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில், முழு உருவ சிலை அமைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அந்த சிலையை திறக்க திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் அந்த சிலையை அமைக்க அனுமதி பெறப்படாததால், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆர்டிஓ திவ்யஸ்ரீ ஆகியோர் தலைமையில் நேற்றிரவு ஜெயலலிதாவின் சிலையை அகற்றினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஜெயலலிதாவின் சிலையை தாசில்தார் அலுவலகத்துக்கு பெயர்த்தெடுத்து சென்றனர். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு சிலை அமைக்க முடியாத நிகழ்வு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அனுமதி பெறப்படாத நிலையில், யாருடைய சிலையாக இருந்தாலும் அதை அகற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை. எனவே அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்துள்ளனர் என மக்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.