- Home
- Tamil Nadu News
- 60 ஆண்டுகால நிராசை.. தமிழகத்தில் ராகுல் ட்விஸ்ட்..! சல்லி சல்லியாக நொறுங்கும் தமிழக காங்கிரஸார்..!
60 ஆண்டுகால நிராசை.. தமிழகத்தில் ராகுல் ட்விஸ்ட்..! சல்லி சல்லியாக நொறுங்கும் தமிழக காங்கிரஸார்..!
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ந்த அளவுக்குக்கூட காங்கிரஸ் வளரவில்லை என்பதும், உட்கட்சி பூசல்களே காங்கிரஸின் சரிவுக்கு முக்கிய காரணம் என்பதும் காங்கிரஸ் வட்டாரங்களே ஒப்புக்கொள்ளும் உண்மை.

டெல்லியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாடு அரசியலில் நேரடியாக தலையிட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளுமே இனி ராகுல் காந்தியே நேரடியாக களமிறங்க உள்ளார் என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் பழமையான தேசிய கட்சியான காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சி அமைத்தும், சில மாநிலங்களில் வலுவான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை கடந்த 60 ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலை மிகவும் பலவீனமாகவே இருந்து வருகிறது.
மத்தியில் முக்கிய தேசிய கட்சியாக அங்கம் வகித்து வந்தாலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்தாலும் தேசிய கட்சியான காங்கிரஸ் திமுகவின் தயவில் மட்டுமே வெற்றிபெற்று வருகிறது என்கிற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில திமுக கூட்டணியில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த பின்னணியில் டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட கூட்டம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பு வழக்கமான ஆலோசனை கூட்டமாக இல்லாமல், தமிழக காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பப்பட்ட ஒரு ஆபரேஷன் மீட்டிங்காகவே மாறியதாக சொல்லப்படுகிறது. கூட்டத்தில் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.
கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி போன்ற தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வளர்ச்சி இல்லை? கடந்த ஆண்டுகளில் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் கட்சி வளர்க்க என்ன செய்து இருக்கீங்க என அவர் நேரடியாகவே கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம் அளித்தபோதும், அந்த பதில்களால் ராகுல் காந்தி திருப்தி அடையவில்லை என்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் காங்கிரஸ் எம்.பி.,யிடம், அவரது தொகுதியில் உள்ளபூத் ஏஜென்ட்கள் மற்றும் பூத் கமிட்டிகள் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி கேட்டபோது அவர் தெளிவான பதில் அளிக்க தவறியதாகச் சொல்கிறார்கள்.
இதனால் ராகுல் காந்தி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். தமிழ்நாட்டின் கடைசி காங்கிரஸ் முதலமைச்சராக பக்தவச்சமும் இருந்தார் என்பதும் அனைவருக்குமே தெரியும். 1967-ம் ஆண்டுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியத்துடன் அதன் பிறகு திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் தனித்த அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் வளர தவறியதே இன்றைய பின்னடைவுக்கு காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ந்த அளவுக்குக்கூட காங்கிரஸ் வளரவில்லை என்பதும், உட்கட்சி பூசல்களே காங்கிரஸின் சரிவுக்கு முக்கிய காரணம் என்பதும் காங்கிரஸ் வட்டாரங்களே ஒப்புக்கொள்ளும் உண்மை. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையில் இருந்து அடிமட்ட நிர்வாகம் வரை நீண்ட காலமாக நிலவிவரும் உட்கட்சி பூசல் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தீவிரமாக கவனத்தில் எடுத்துள்ள ராகுல் காந்தி இனி தமிழ்நாடு அவரே நேரடியாக தலையிட்டு கட்டுப்பாட்டை தன் கையில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பட்டியல் முழுமையாக ராகுல் காந்தியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் வகையில் சுமார் 70 மாவட்ட தலைவர்களில் 60க்கும் மேற்பட்டோர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலமாகவே இனி வரும் காலங்களில் தமிழ்நாடு காங்கிரஸின் அரசியல் கடிவாளம் முழுவதுமே ராகுல் காந்தி வசம் செல்ல உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அவர் நேரடியாக அரசியல் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
