இரட்டை இலையையும், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஜெயலலிதா சிலை அமைப்பதில் எந்த அலட்சியமும் இல்லை என்றும் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த 24 ஆம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் திறந்து வைத்தனர். திறக்கப்பட்ட அந்த சிலை ஜெயலலிதாவின் சாயலில் இல்லை என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்
கூறியிருந்தார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை, மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க எம்.பி-யுமான தம்பிதுரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டதில் அலட்சியம் ஏதும் இல்லை. சிலையில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்படும் என்றார். அதிமுக ஆலமரம் போன்ற இயக்கம். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி அது. தமிழ்நாட்டுக்கும், தமிழக
மக்களுக்கும் நீதியைப் பெறுவதற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட சமூக நீதி வழிவாந்த இயக்கம்.

அந்த இயக்கம் தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. தமிழர்களின் உரிமையையும், தமிழர் இனத்தையும், தமிழ் மொழியையும் காப்பாற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதிமுகவை ஜெயலலிதா வழி நடத்தினார். தமிழை ஆட்சி மொழியாக்க அவர் குரல் கொடுத்தார். இரட்டை இலையையும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஜெயலலிதா கூறியதுபோல 5 ஆண்டுகள் மட்டுமல்ல, 100 ஆண்டுகள் அதிமுக தமிழகத்தில் ஆட்சி நடத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று தம்பிதுரை கூறினார்.