ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிரே ஜெ.படம்… இது சட்டப் பேரவை பரபரப்பு …
தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் தனபால் இன்று திநது வைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிரே அடைக்கப்பட்டுள்ளது தற்செயலானதா ? அல்லது உள்நோக்கம் கொண்டதா? என கேள்வி எழுந்துள்ளது.
6 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், சட்டமன்ற அரங்கில் ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை திறக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஜெயலலிதாவின் உருவப்படம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றன.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவரின் படத்தை சட்டப் பேரவைக்குள் வைக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இது சட்டப் பேரவையின் ஒரு கருப்பு நடவடிக்கை என மு.க.ஸ்லின் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை புறக்கணித்தனர்.
இந்நிலை0யல் 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவப்படத்தை பேரவை தலைவர் தனபால் இன்று திறந்துவைத்தார். இந்த விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சட்டமன்ற அரங்கில் இதற்கு முன்னதாக மகாத்மா காந்தி, அம்பேதகர், திருவள்ளுவர், காயிதே மில்லத், ராஜாஜி, பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படம் அமைந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ஜெயலலிதாவின் உருவப்படம், முதலமைச்சரின் இருக்கைக்கு பின்னுள்ள 2 மற்றும் 3வது தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜெயலலிதாவின் படம் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிராக அமைந்துள்ளது. ஸ்டாலின் எழுந்து நின்று பேசத் தொடங்கினால் கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் படத்தை பார்த்துக் கொண்டுதான் பேச வேண்டும். இது தற்செயலாக நடந்ததா? அல்லது உள்நோக்கம் கொண்டதா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.