முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு, அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் வாரிசுகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. அதே வேளையில் ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே போயஸ் தோட்ட இல்லத்தில் தாங்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாக தீபாவும் தீபக்கும் புகார் கூறிவருகிறார்கள். இந்நிலையில் போயஸ் தோட்ட வீட்டுச் சாவியைக் கேட்டு தீபக் வழக்கும் தொடர்ந்துள்ளார்.


இதுதொடர்பாக தீபக் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். “வேதா இல்லம் எங்களின் சொத்து. அதை நினைவிடமாக மாற்ற நாங்கள் தயாராக இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தங்கள் பரம்பரைச் சொத்தை ஜெயலலிதாவுக்காக நினைவிடமாக மாற்றட்டும். அதன்பின்னர் வேதா இல்லத்தை நாங்கள் தருகிறோம். வேதா இல்லம் எங்கள் பாட்டியின் சொத்து. அது எடப்பாடியும் பன்னீர்செல்வமும் வாங்கிய சொத்து அல்ல. ஜெயலலிதாவின் பிற சொத்துகளையும் எங்களுக்கு கிடைக்கவிடாமல் தமிழக அரசு தடைபோடுகிறது.


நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை.போயஸ் தோட்டம் வந்தால், போலீஸை வைத்து எங்களை துரத்துகிறார்கள். ஜெயலலிதாவின் வருமான வரி நிலுவைத் தொகையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஒரே கேள்வியெல்லாம் எங்களை ஏன் வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறீர்கள்?” என்று தீபக் தெரிவித்தார்.