முதல்வர் ஜெயலலிதா தான் சிகிச்சை பெற்ற அதே மாடியில் உள்ள வார்டுக்கு மாற்றப்பட்டார். இரண்டாம் தளத்தில் உள்ள மற்றொரு பகுதியில் உள்ள வார்டுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் வகித்து வந்த இலாகாக்கள் நிதியமைச்சர் ஓபிஎஸ்சுக்கு மாற்றப்பட்டது.
முதல்வராக நீடித்த ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அழைக்கப்பட்டார். அவருக்கு லண்டனிலிருந்து தீவிர சிகிச்சை சிறப்பு நிபுணர் ரிச்சர்டு பேல் தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எய்ம்ஸிலிருந்தும் மருத்துவர்கள் வந்தனர்.
சிறப்பு பிசியோதெரபி சிகிச்சைக்காக சிங்கப்பூரிலிருந்து மருத்துவர்கள் வந்தனர். பலவிதமான நிபுணர்களின் முயற்சியால் கிருமி தொற்று , நுரையீரல் பிரச்சனை மற்றும் தீவிர சிகிச்சையிலிருந்த முதல்வர் சாதாரண நிலையை அடைந்தார்.

அவருக்கு கொடுக்கப்பட்டு வந்து சுவாச சிகிச்சையும் விலக்கி கொள்ளப்பட்டது. இயல்பான நிலைக்கு மாறிய முதல்வர் அறிக்கையில் கையெழுத்திடும் அளவுக்கு உடல் நிலை தேறினார்.
நேற்று முன் தினம் அவரது உடல் நலம் குறித்து பேட்டியளித்த அப்போலோ குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி. முதல்வர் பூரண குணம் அடைந்துவிட்டார், அவருக்கு ஊட்டசத்துமிக்க உணவு வழங்கப்படுகிறது. அவர் சாதாரணமாக உரையாடுகிறார், நல்ல மனநிலையில் இருக்கிறார், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாங்கள் எதுவும் முதல்வருக்கு சொல்ல மாட்டோம் அவரே தீர்மானிப்பார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் பூரண குணம் அடைந்து விட்டாலும் மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல்வர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார். இன்று காலையிலேயே முதல்வர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுகிறார் , டிஸ்சார்ஜ் ஆகிறார் என்றெல்லாம் ஹேஸ்யங்கள் கிளம்பின.
இந்நிலையில் இன்று மதியம் 3 மணியளவில் முதல்வர் இருக்கும் இரண்டாம் தளத்தில் பரபரப்பு தொற்றிகொண்டது. முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்திலுள்ள தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள அனைத்து போலீசாரும் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் மாடிக்கு கோர் செல் எனப்படும் (core cell ) முதல்வரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் நிரப்பபட்டனர்.
அமைச்சர்கள் , உயர் அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் , சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் மட்டுமே இரண்டாம் தளத்தில் இருந்தார். முதல்வர் சம்பந்தப்பட்ட சிகிச்சை கருவிகள் மற்ற பொருட்கள் ஒவ்வொன்றாக அதே தளத்தில் உள்ள மற்றொரு புறம் அமைந்துள்ள ‘’ A ‘’வார்டுக்கு எதிரில் உள்ள லேபர் வார்டுக்கு மாற்றப்பட்டது.
அந்த வார்டு நான்கு அறைகளை கொண்டது. அதை ஒரே வார்டாக மாற்றியுள்ளனர். முதல்வர் இந்த வார்டில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பிற பயிற்சிகள் எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சரியாக 5.15 மணிக்கு முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
