அன்றே தினகரன் அசால்டாக சொன்னார், ‘அ.தி.மு.க. அரசில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள். தேவைப்படும்போது அவர்கள் வெளிப்பட்டு, என்னை ஆதரிப்பார்கள்.’ என்று.

ஆனால் இதை எடப்பாடி - பன்னீர் அரசு ‘ச்சும்மா ஸீன் போடுறார்!’ என்று அலட்சியப்படுத்திவிட்டது. இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு வரும் சூழலில் மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் தினகரனின் கட்சியை  ஆதரித்திருப்பதன் மூலம் ஆட்சிக்கு ஆயிரம் லிட்டர் எனிமாவை கொடுத்திருக்கிறார்கள். வெளியே சிரித்தாலும், உள்ளே உறைந்து போய் கிடக்கிறார்கள் பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும்.

அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக தினகரனை ஆதரிக்க துவங்கியிருப்பதோடு, சமீபத்தில் அவரது கட்சியின் துவக்க விழாவிலும் கலந்து கொண்டுள்ளனர். பி.ஜே.பி.யை விமர்சித்ததற்காக கே.சி. பழனிசாமியை கட்சியிலிருந்தே தூக்கி வீசிய தலைமை இவர்கள் மூன்று பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

‘தினகரனின் கட்சி விழாவில் கலந்து கொண்டதற்காக இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று சட்ட வல்லுநரை ஆலோசிக்க வேண்டியுள்ளது.’ என்கிறார் நத்தம் விஸ்வநாதன்.இந்நிலையில்,  தினகரனை ஆதரிக்கும் மூன்று எம்.எல்.ஏ.க்களுக்கு அரசுக்கு எதிராக கொக்கரிக்க துவங்கியுள்ளனர் இப்படி...

“சட்டப்படி சின்னமாதான் பொதுச்செயலாளர். டி.டி.வி.தினரன் தான் துணைபொதுச்செயலாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். செய்யும் நியமனங்கள் எதுவுமே செல்லாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் நாங்களும் சேர்ந்து தான் இந்த ஆட்சியை காப்பாற்றினோம்.

ஆனால் அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ். உட்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு ராஜமரியாதை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா?
தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஊழல் ஆட்சிதான். இது ஓராண்டு சாதனையல்ல, வேதனை. என்ன சாதித்துவிட்டதாக ஓராண்டு விழா எடுக்கிறார்கள்!.அம்மா எதிர்த்த உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்றவற்றை இவர்கள் அனுமதித்துவிட்டார்கள்.

ஆயிரம் முறை சொல்வோம் தினகரன் தான் எங்கள் துணை பொதுச்செயலாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை.” என்றிருக்கிறார்கள்.
தரையிறங்கி அடிக்கும் இவர்களின் மீது பழனி-பன்னீர் இருவரும் பாய்ச்சல் காட்டுவார்களா அல்லது பதுங்குவார்களா? என பொறுத்திருந்து கவனிப்போம்.