jayalalitha first statue in tamilnadu

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாட்டில் முதல் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் கடந்த பல நாட்களாக நடந்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ.உ.சி.மைதானம் அருகே உள்ள அண்ணா சிலை பராமரிக்கப்பட்டு வந்தது. பராமரிப்புப் பணிகள் நடந்துவந்ததால், சிலை தகரங்களால் மூடப்பட்டிருந்தது.

இதற்கிடையே அண்ணாவின் சிலையை அகற்றிவிட்டு எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் பரவின. ஆனாலும், என்ன நடக்கிறது என்பது தெரியாத வகையில், சிலை தகரங்களால் மூடப்பட்டிருந்தது.

இன்று, கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில், தகரங்கள் அகற்றப்பட்டன. அதைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.

அண்ணாவின் சிலைக்கு அருகில் எம்ஜிஆர் சிலையும், அதற்கு அடுத்து ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரே பீடத்தில் மூன்று முன்னாள் முதல்வர்களின் சிலை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அதேபோலவே, ஜெயலலிதாவிற்கும் இதுதான் முதல் சிலை.

கோயம்பத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய கொங்கு மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றதே 2016ல் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய முக்கிய காரணம். அதனால், ஜெயலலிதாவின் முதல் சிலை கோயம்பத்தூரில்தான் அமைக்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியதாகவும் அதனால்தான் ஜெயலலிதாவின் முதல் சிலை கோயம்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.