நம் கையிலிருக்கும் குச்சியை ஓவராக ஷார்ப்பாக்கினால் ஒரு கட்டத்தில் நம் கண்ணிலேயே குத்தி தனது கூர்மையை செக் செய்துகொள்ளுமாம் அது! அரசியலில் இந்த விவகாரம் ரொம்பவே சகஜம். அப்படித்தான் டாக்டர் ராமதாஸின் தளபதியாக ஒருகாலத்தில் இருந்தவர் வேல்முருகன். காடுவெட்டி குருவுக்கு அடுத்த நிலையில் இருந்த இவர் ராமதாஸின் சிஷ்யனாக பெரியளவில் வளர்ந்தார். 

சில வருடங்களுக்கு முன் தலைமையிடம் ஏற்பட்ட முரண்பாட்டினால் பா.ம.க.வில் இருந்து பிரிந்து வெளியே சென்றவர் ‘தமிழக வாழ்வுரிமைக் கட்சி’ எனும் பெயரில் புதிய கட்சி ஒன்றை துவக்கி இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது கட்சி பெரிதாய் அறியப்படவில்லை என்றாலும் தனி மனிதனாக வேல்முருகன் நன்றாகாவேதான் காலூன்றி நிற்கிறார். 

ராமதாஸுக்கு எதிராக வீராவேசமாக வட மாவட்டங்களில் கம்புசுற்றி வருவதோடு, வன்னியர் சமுதாய வாக்குகள் முற்றிலுமாக பா.ம.க.வை நோக்கிச் சென்றுவிட கூடாது என்பதில் மிக தெளிவாகவும் இருக்கிறார். இப்பேர்ப்பட்ட வேல்முருகன் இப்போது அ.தி.மு.க.வின் கூட்டணியில் பா.ம.க. இணைந்துவிட்டதை தெறிக்கவிட்டு விமர்சிக்கிறார். அதிலும் ராமதாஸ் மற்றும் அன்புமணியை விமர்சிப்பதை விட முதல்வர் எடப்பாடியாரை கரித்துக் கொட்டுவதைத்தில்தான் ஏக கவனம் செலுத்துகிறார். 

தமிழக முதல்வராக எடப்பாடியாரின் செயல்பாடு பற்றி கருத்து தெரிவித்திருக்கும் வேல்முருகன்...”ஜெயலலிதாவின் தைரியம் தனித்துவமானது. மத்திய அரசை எதிர்த்து மிக மிக துணிச்சலாக குரல்கொடுத்தவர் அவர். ஆனால் அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த துணிச்சலில் ஒரு சதவீதம் கூட கிடையாது. 

அது கூட பரவாயில்லை, மன்னிக்கலாம். ஆனால் எடப்பாடியின் நோக்கம், இலக்கு, முழுநேர குறிக்கோளை நினைக்கும்போதுதான் கவலையும் ஆத்திரமும் வருகிறது. எடப்பாடியாரின் ஒரே குறிக்கோள் ‘பணம்’ மட்டுமே. அதற்கு வழி செய்யும் பதவிதான் அவருக்கு இலக்கு. மற்றபடி எதுவுமில்லை.” என்றிருக்கிறார். இப்படியான விமர்சனத்தின் மூலம் எடப்பாடியாரின் மனதில் ‘தனி இடம்’ பிடித்துவிட்ட வேல்முருகனுக்கு தேர்தலுக்கு அப்புறம் ’சீர்வரிசை’ இருக்கிறது என்கிறார்கள். ஓ மை காட்!