“அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் நானும் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன். அங்கு நடந்தவை எல்லாமே பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும்."
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பெங்களூரு புகழேந்தி மனு அளித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இடையில் விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விசாரணை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்த விசாரணை ஆணையம் முன்பு, 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். ஒன்பதாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட பிறகு விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜரானார்.

புகழேந்தி கோரிக்கை
இரண்டு நாட்கள் ஆஜரான ஓபிஎஸ், ‘ஜெயலலிதாவுக்கு என்ன பிரச்சினை இருந்தது என்று எனக்குத் தெரியாது, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லலாம் என்று சொன்னேன், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் எந்த சந்தேகமும் இல்லை’ என்றெல்லாம் ஓபிஎஸ் சொல்லியிருந்தார். நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த வாக்குமூலம் நிறைவு பெற்றதையடுத்து, அடுத்த கட்டமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரணை ஆணைய விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடிக்கு தெரியும்
இதுதொடர்பாக பெங்களூரு புகழேந்தி, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமியுடன் நானும் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன். அங்கு நடந்தவை எல்லாமே பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் வரிப் பணம் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக இந்த ஆணையத்துக்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரட்டை இலையை மீட்க நாடகத்தை அரங்கேற்றினர் என்பது ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமியையும் விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறேன்” என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்துள்ளார்.
