Jayalalitha Assistant Poonkandran should be present on 23rd

ஜெ. உதவியாளரிடம் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை! 23-ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்! விசாரணை ஆணையம் உத்தரவு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். வரும் 23 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா காலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து தமிழக அரசு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஒன்றை அமைத்தது. 

சென்னை, எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுடன் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை ஏற்று பூங்குன்றன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

பூங்குன்றனிடம் நீதிபதி ஆறுமுகசாமி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். இதற்கு பூங்குன்றன் பதிலளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக எந்த வகையிலான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? உடல்நலம் மோசமாகும் நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பூங்குன்றனிடம் கேட்கப்பட்டது. 

விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பூங்குன்றனிடம் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. பூங்குன்றனிடம் பல்வேறு விளக்கங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், வரும் 23 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.