jayakumar warning sellers about GST
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல் அத்தியாவசிய பொருட்களும், ஜிஎஸ்டி வரியை காரணம் காட்டி, விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், பாமர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜிஎஸ்டி வரி குறிப்பிட்ட பொருட்களுக்கு என சராசரியாக விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை சிலர் முறைகேடாக பயன்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து கூடுதலாக பணம் பெறுவதாக புகார்கள் வருகின்றன. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்டதற்கு மேல் பணம் பெறப்பட்டது தெரியவந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக புகார் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக அரசிடமும் புகார் செய்யலாம். ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
