jayakumar says that dmk trying to split admk

அதிமுகவில் எந்த பிரிவினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் பிரிந்து இருப்பதுபோல் திமுக சிண்டு முடிந்து கொண்டு இருக்கிறது என அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களிடம் கூறினார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

அதிமுகவில் பிரிவு என ஏற்பட்டது. ஆனால், நாங்கள் ஒரே கட்சிக்காகவும், ஒரே கொள்கைக்காகவும் உழைத்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சியில் எந்த பிளவும் இல்லை.

எங்களின் கருத்து வேறுபாட்டினை கையில் எடுத்து கொண்டு திமுகவினர், வதந்தியை பரப்பி வருகின்றனர். அதிமுகவினரை பற்றி திமுகவினர் சிண்டு முடிந்து கொண்டு இருப்பதையே திட்டமிட்டு வேலையாக கொண்டுள்ளனர்.

எங்களுக்கு வேற்றுமை இல்லை. ஒற்றுமையாக இருக்கிறோம். யாராவது எதை சொன்னாலும், அதை நம்ப வேண்டாம்.

இரு அணிகள் இணைவதில் எந்த ஒளிவு மறையும் இல்லை. நாங்கள் தனிப்பட்ட கூட்டம் நடத்தவில்லை. எங்கள் அணியில் ஒரு குழு அமைத்துள்ளோம். அதே போல் ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழு வைத்துள்ளனர்.

செம்மலை கூறிய கருத்து அவருக்கு சொந்தமானதா அல்லது அந்த குழுவினரின் ஒட்டு மொத்த கருத்தா என்பது தெரியவில்லை.

நாங்கள் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறோம். எங்களுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு வார்த்தைக்கு வரலாம். நாங்கள் கட்சியில் பிளவு ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்.

ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் எந்த பேச்சு வார்த்தையும் இன்னும் நடக்கவில்லை. அதன்பின்னரே அவர்களின் நிபந்தனை குறித்து ஆலோசிக்கப்படும்.

எம்ஜிஆர் தொடங்கிய கட்சியை, ஜெயலலிதா எஃகு கோட்டையாக மாற்றி வைத்து இருந்தார். அதை அப்படியே முழுமையாக தக்க வைக்க நாங்கள், போராடி வருகிறோம்.

கட்சிக்கு பொது செயலாளர் இல்லாவிட்டாலும், தலைமை நிலைய செயலாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். இரு அணிகள் குறித்து, தொண்டர்களிடம் மனுக்களை வாங்கி பரிசீலனை செய்கிறார்கள்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாளை மாவட்டந்தோறும் கொண்டாட, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அந்தந்த பகுதியில் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.