அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ.. அரசியல் கட்சிகளோடு கூட்டணி பேச்சு தொடங்கியாச்சு - ஜெயக்குமார் அதிரடி
அதிமுக உடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அரசியலில் நிரந்தர எதிரியும், நிரந்தர நண்பனும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகளும், குழு உறுப்பினர்களாக நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, பா. வளர்மதி, O.S.மணியன், R.B. உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களை கவரும் வகையில் திட்டங்களை அறிவிப்பது. வாக்குறுதிகளை அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
சூப்பர் ஹீரோவாக தேர்தல் அறிக்கை
இதனை தொடர்ந்து மண்டல வாரியாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்பது எனவும், ஒவ்வொரு துறையிலும் செயல்படும் சங்கங்களிடமும், தொழில்துறை சார்ந்தவர்களை சந்தித்து கருத்துக்கேட்கவும் அவர்களின் கோரிக்கையை எழுத்து பூர்வமாக வாங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிக்கு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், அதிமுக தேர்தல் அறிக்கை, தமிழ்நாட்டின் உரிமையை பேணிக்காக்கும் வகையிலும், மக்களின் நலம் சார்ந்த சூப்பர் ஹீரோவாக தேர்தல் அறிக்கை இருக்கும் என தெரிவித்தார்.
அரசியல் கட்சியோடு கூட்டணி பேச்சு
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக உடன் கூட்டணி அமைக்க அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அரசியலில் நிரந்தர எதிரியும், நிரந்தர நண்பனும் இல்லை என்றார். மேலும், 2019-ம் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மோசடி தேர்தல் அறிக்கையை தயார் செய்து மக்களை நம்ப வைத்தது போல இந்தமுறை தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என ஜெயக்குமார் விமர்சித்தார். அதிமுக இருக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், டி.டி.வி தினகரனை ஒரு தனிமரம் எனவும் அவர்களை ஒரு பொருட்டாகவே அதிமுக கருதவில்லை என விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்