கடந்த ஒரு வாரகால அரசியல் நிகழ்வுகளை வைத்து பார்த்த போது பாஜகவை அதிமுக கண்டுகொள்ளவில்லை என்பது போல் ஒரு தோற்றம் இருந்தது. அதாவதுஇடைத்தேர்தலில் பாஜக சவகாசமே வேண்டாம் என்று அதிமுக ஒதுங்கி இருந்தது போல் தெரிந்தது. ஆனால் நிலைமையே வேறு என்பது நேற்று ஜெயக்குமார் பாஜக தலைமை அலுவலகம் சென்ற பிறகு தான் தெரியவந்தது.

உண்மையில் பாஜக மேலிடத்தை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அதிமுக மேலிடம் அணுகியதாக கூறுகிறார்கள். ஆனால் ஆதரவு குறித்து பிறகு தெரிவிக்கிறோம் என்று பாஜக கைவிரித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பாஜக மேலிடம் பிறகு அறிவிக்கும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ பாஜக தங்கள் கூட்டணியில் இருப்பதாக பட்டும் படாமலும் கூறினார்.

இதற்கிடையே ஆதரவு விவகாரத்தில் பாஜக மேலிடம் மவுனமாக இருந்தது எடப்பாடியை பீதிக்கு ஆளாக்கியுள்ளது. ஏனென்றால் குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதாகவும், திமுக பாஜகவுடன் நெருங்குவது போல் தோன்றியதாலும் இடைத்தேர்தலில் பாஜக ஆதரிக்கவில்லை என்றால் கட்சி நிர்வாகிகளின் சந்தேகத்திற்கு ஆளாக நேரிடும் என்று பதறியதாக சொல்கிறார்கள். இதனை அடுத்தே அமைச்சர் எஸ்பி வேலுமணி அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

அங்கு பாஜக முக்கிய பிரமுகர்களை சந்தித்து இடைத்தேர்தல் குறித்து நடத்திய ஆலோசனையின் முடிவில் தான் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளது அக்கட்சி. அதே சமயம்  உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது குறித்து பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்று பொன்.ராதா கூறியிருப்பது பாஜக – அதிமுக உறவில் இருந்த பிணைப்பு குறைந்து வருவதையே காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.