Asianet News TamilAsianet News Tamil

மத்தியில் பூம் பூம் மாடு போல் தலையாட்டிய திமுக..! இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது- சீறிய ஜெயக்குமார்

பொதுப் பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Jayakumar has accused DMK of playing a double role in seat reservation
Author
First Published Nov 11, 2022, 11:22 AM IST

பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு

பொதுப் பிரிவினரின் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம்மை ஆளாக்கிய இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியை ஈட்டியது போல், அரசியலில் இரட்டை வேடம் போட்டு தானும் வெற்றி பெறலாம் என்ற மமதையில் இந்த விடியா அரசை தலைமை தாங்கும் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போது கனவில் மிதந்து வருகிறார். 'புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்' என்று ஒரு அதிபுத்திசாலி சொல்லுவது போல், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில், தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளையும் இன்றைய முதல்வர் துணைக்கு அழைக்கிறார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக..! வாக்குச்சாவடி முகவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

இரட்டை வேடம் போடும் திமுக

ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சி குலாவியபோது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, நீட் மற்றும் 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு, பூம் பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு இன்றைக்கு ஏதோ வறியவர்களைக் காக்க அவதாரம் எடுத்தது போல் வித்தை காட்டிக்கொண்டிருக்கிறார் இந்த பேசா மடந்தை முதலமைச்சர். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-திமுக கூட்டணியிலான மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-திமுக மத்திய கூட்டணி அரசு. அப்போது, திமுக சார்பில் பதவியில் இருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை. 

அனைத்து கட்சியை அழைப்பது ஏன்.?

இந்த சட்டத்தைத்தான் தற்போதைய BJP அரசு 2019-ல் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. காரியம் ஆகவேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை, தற்போது BJP தேவையில்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பதுபோல் நடிக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றக் கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தாமல், தாந்தோன்றித்தனமாக வாதிட்டு மூக்கறுபட்ட பின், வழக்கின் தீர்ப்பு வந்தபிறகு, தற்போது மற்ற கட்சிகளை அழைப்பது எந்தவிதத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்..! திண்டுக்கல்லில் மோடி..! சென்னையில் அமித்ஷா..! தமிழகத்தை குறிவைத்த பாஜக..

 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வர கூடாது

இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் திமுக-வின் தயவால் அங்கு இடம் பெற்றவை. அவைகளில், இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த முதல்வரின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டு, அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலான, இந்த பொருளாதார இட ஒதுக்கீட்டை மனமுவந்து வரவேற்பதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.  எங்களுடைய இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எளிய மக்களுக்காக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தி தந்த 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பங்கமும் வராமல் பார்க்கும் வேலையையாவது இந்த விடியா அரசின் முதலமைச்சர் உறுதியோடு மேற்கொள்ள வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளையும், தலைசிறந்த வழக்கறிஞர்களையும் வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

அனைத்து கட்சி கூட்டம்- கபட நாடகம்

ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுக-வின் கபட நாடகத்தை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழகம் வரும் பிரதமர்..! சமூக வலை தளத்தில் டிரெண்டாகும் கோ பேக் மோடி...! வெல்கம் மோடி..!

Follow Us:
Download App:
  • android
  • ios