தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டம் சூட்டிய ஓபிஎஸ்.! போராட்டத்தில் தடியடி நடத்தியது யார்.? ஜெயக்குமார்
அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாக தான் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடைபெற்றதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்வதாக விமர்சித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி
தமிழகத்தில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வருகிற 22ஆம் தேதி தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் சென்னை சின்ன மலையில் இருந்து பேரணியாக சென்று தமிழ்நாடு ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளனர். இதற்கு பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை, 30 ஆயிரம் கோடி ஊழல், கள்ளச்சாரய மரணம் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
அதிமுகவின் சட்ட நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் , கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை தொடர்ந்து நடப்பதாக தெரிவித்தவர், காரில் வந்து நகை பறிக்கும் செயலும் தொடங்கியுள்ளதாக கூறினார். தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்தவர், சட்ட ஒழுங்கு இந்தியாவில் மிக மோசமான மாநிலம் தமிழ்நாடுதான் உள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்ததாக தெரிவித்தார். அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாகவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இடையூறு இல்லாமல் நடைபெறுவதாக கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டு நாயகன் என தன்னை தானே சொல்லிக்கொள்ளும் ஓபிஎஸ், மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தது யார் என கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகனா.?
இதில் நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாவும், இவர் முதலமைச்சராக இருந்த போது குடியரசு விழா நடக்க வேண்டும் என்று தடியடி நடத்தப்பட்டதாகவும் கூறினார். அப்படி பட்ட இவரா ஜல்லிக்கட்டு நாயகனா என்று கேள்வி எழுப்பினர். உண்மையை மறைக்க தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் என்று ஓபிஎஸ் சொல்லிக் கொள்வதாகவும் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்