அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் செயற்குழுவில் அரசு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றிதான் கூட்டத்தை நடத்தினோம். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அதை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்கிறார்.
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தற்போதுள்ள அபாய கட்டத்தில் கூட்டத்தை தவிர்ப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும் என்பதற்காகவே அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து என்ற முடிவை எடுத்தது. ஆனால், எனக்கு சட்டம் கிடையாது என ஸ்டாலின் செயல்படுவது எப்படி ஜனநாயகத்தில் சரியாக இருக்கும்? ஸ்டாலின் தடையை மீறி செயல்பட்டது குற்றம் குற்றமே. 6-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் தவறானது. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துன் நோக்கில் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள்.


வதந்திகளை பரப்பி குளிர்காய துரோகிகளும் எதிரிகளும் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடைபெறாது. உட்கட்சி விவகாரம் தொடர்ந்தால் அதிமுக ஆட்சிக்கு வருவதை மறந்துவிட வேண்டியதுதான் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்த கருத்தை நான் ஏற்க மாட்டேன். அதிமுகவில் நடப்பது நாளையே சரியாகிவிடும். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பூகம்பமே ஏற்பட்டாலும் அதிமுகவில் எந்தப் பிளவும் ஏற்படாது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.