புயல் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் ஹெலிகாப்டரில் செல்லாமல், காரில் சென்று ஆய்வு செய்து இருக்க வேண்டும் என  மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு பதிலடி தரும்படி, எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படக்கூடாது என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

கஜா புயலால் 6 மாவட்டங்கள் முழுவதும் பெரும் நாசமானது. ஏராளமான ஹெக்டேர் நிலங்கள், அழிந்துள்ளன. தென்னை மரங்கள் சாய்ந்தன. வீடுகள் இடிந்து, பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து வாழ்வாதாரதை தொலைத்துள்ளனர்.

இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். தஞ்சை, நாகை ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர், திருவாரூர் புறப்படும்போது மழை பெய்ததால், அவர்  தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் சென்று இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ஜெயகுமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய் தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் பார்வையிட்டது அவரது வசதிக்காக அல்ல மக்களுக்காகவே.

ஹெலிகாப்டரில் முதல்வர் சென்று பார்வையிட்டதால்தான், பாதிப்புகளை விரைந்து கணக்கிட்டு பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிந்தது. எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக இருக்கக் கூடாது .

தமிழக அரசு கேட்ட நிதியை, மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிவாரண பணிகளில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.