அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ள செந்தில்பாலாஜி குறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், திமுகவில் சேர்ந்தால் கடலில்  கரைந்த பெருங்காயம் போல் ஆகிவிடுவார் என குறிப்பிட்டார்.

சென்னை வண்ணாரப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் , ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ரூ.2 கோடியில் நவீன, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில், கலந்து கொண்ட அமைச்சர் ஜெயகுமார், அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவருடன் தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.

டிடிவி.தினகரன் ஒரு எடுபடாத பிராண்டு. எந்த அங்கீகாரமும் இல்லாதவர். அவர் ஹை வோல்டேஜ் மின்கம்பி என கூறிக் கொள்கிறார். அப்படி கூறுவது, அவருக்கே ஆபத்தாகும். அவர், ஹைவோல்டேஜ் என்பதாலேயே அவருடன் யாரும் நிலையாக இருக்கவில்லை.

ஆனால் நாங்கள், 230 வோல்ட் கொண்ட பாதுகாப்பான மின்சாரம். எங்களுடன் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போதும், எங்களுடன் இருக்கிறார்கள்.  230 வோல்ட் மின்சாரம் மட்டும் பயன்படுத்தவும், பாதுகாப்பானதுமாகும். ஆனால், ஹை வோல்ட் என கூறும் டிடிவி.தினகரன் எப்போதும் ஆபத்தானவர்தான்.

திமுகவில் இணைபவர்களின் நிலை ஒருநாள் ஹீரோவாக மட்டுமே ஜொலிப்பார்கள். அதன்பின்னர், அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.  திமுகவில் சேர்ந்தால், கடலில் கலந்த பெருங்காயம் போல் ஆகிவிடுவார்கள். அதாவது, யாராக இருந்தாலும், காணாமல் கரைந்து போய்விடுவார்கள் என்றார்.