Jaya TV General Manager home test
ஜெயா தொலைக்காட்சியின் பொது மேலாளர் நடராஜனின் லாக்கரைத் திறந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அதில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
சசிகலா, தினகரன் தொடர்புடையவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உறவினர்களில் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போலி நிறுவனங்களின் பெயரில் 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த சோதனையில் அதிக எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளும், கிலோ கணக்கில் தங்க கட்டிகளும் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதே போன்று ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக தெரிகிறது. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அசந்து போயுள்ளனர். தோண்ட, தோண்ட சுரங்கம் போல் வந்த போலி நிறுவனங்கள் குறித்த தகவலால் அவர்க்ள மிரண்டு போனதாக கூறப்படுகிறது.
20-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும், அதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்ததும் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து விவேக் செயல்படுத்திய வந்த 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும் போலி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்ககும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, விவேக்கிடம், அதிகாரிகள் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயா தொலைக்காட்சியின் பொது மேலாளர் நடராஜனின் லாக்கரை திறந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜெயா டிவி சிஇஓ விவேக்கிற்கு நெருக்கமானவரும், ஜெயா டிவியின் பொது மேலாளருமான நடராஜன் வீட்டில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நடராஜனின் பர்சனல் லாக்கரைத் திறந்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். லாக்கரில் இருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
