திராட்சை தோட்டங்கள், தேயிலை எஸ்டேட்டுகள், மேகங்களே நுழைந்து செல்லும் பிரம்மாண்ட பங்களா, காஸ்ட்லி கார்கள் என்று எவ்வளவோ இருந்தாலும் கூட ஜெயலலிதா தன் சொத்துக்களில் மிகவும் நேசித்தது ’ஜெயா டி.வி. குழுமம்’ என்பதை. ஜெயலலிதாவின் கருத்துக்களையும், கோபதாபங்களையும், அன்பையும், ஆசீர்வாதத்தையும் அ.தி.மு.க.வின்  ஒவ்வொரு உறுப்பினரிடமும் நேரடியாக கொண்டு சேர்த்த ஊடகம் அது. தன் இயக்கத்தினரை தன் தொடர்பு எல்லைக்குள்ளும், கட்டுப்பாட்டுக்குள்ளும், தன் வார்த்தைகள் படும் தொலைவிலும் வைத்திருக்க உதவியதால் அத்தொலைக்காட்சியைதான் தன் ஃபேவரைட் சொத்தாக கருதினார் ஜெயலலிதா.


அவரது மறைவுக்குப் பின் கட்சி, ஆட்சி என எல்லாவற்றிலும் ஏக மாற்றங்கள் வந்த போது ஜெயா டி.வி. குழுமத்திலும் வராதா என்ன? ஜெயா டி.வி.யின் சி.இ.ஓ.வாக இருப்பவர் விவேக். சசிகலாவின் அண்ணி இளவரசியின் ஒரே மகன். ஜெயலலிதா, தன் செல்லக் குழந்தையான இவரைத்தான் தனது செல்ல சொத்தான ஜெயா டி.வி. குழுமத்தின் தலைமை நிர்வாகியாக நியமித்திருந்தார். ஜெ., மறைவுக்குப் பின்னும் அதே பொறுப்பில் தொடர்ந்தார் விவேக். 
ஜெ., மறைவுக்குப் பின் சசிகலாவின் புகழ் பாடும் ஊடகமானது இது. அவர் சிறை சென்ற பின் சசி மற்றும் தினகரனின் புகழ் பாடும் ஊடகமானது. ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை பற்றி தன் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் புகழ்வதில் விவேக்கிற்கு மகிழ்ச்சிதான், ஆனால் தினகரனை உயர்த்திப் பிடிப்பதில் அவருக்கு ஈடுபாடில்லை. தினகரனை ஓவராய் ப்ரமோட் செய்தால் டி.ஆர்.பி. அடிபடுகிறது என்று கவலைப்பட்டார்.

சிறையில் சசியை சந்திக்கையிலெல்லாம் இதைப் பற்றி சொல்வார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் பெரும் தோல்விக்கு பிறகு விவேக், தினகரன் இருவருமே சசியை சிறையில் சந்தித்தபோதும் இந்த டி.வி. பஞ்சாயத்து வெடித்தது பெரிதாய். 
‘என்னோட கட்சி நிகழ்ச்சியை விவேக் சரியா சேனல்ல காட்டுறதில்லை, இருட்டடிப்பு பண்றார்.’ என்று தினகரன் பேச, ‘என்  சேனல்ல நான் அவரை இருட்டடிப்பெல்லாம் பண்ணல அத்தை. வீணா பழி சொல்றார்.’ என்று விவேக் மறுத்தார். அ.ம.மு.க.வை ‘என் கட்சி’ என்று தினகரன் சொல்லியதும், ஜெயா சேனலை ‘என் சேனல்’ அப்படின்னு விவேக் சொன்னதும் சசியை நிறையவே பாதித்ததாம். 

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று ஜெயா டி.வி.யின் 21-ம் ஆண்டு தொடக்க நிகழ்வு நடந்தது. இதில் பேசிய விவேக் “இருபத்தியோறு வயது என்பது வாழ்வில் முக்கியமானது. எல்லா முடிவுகளையும் நாமாக எடுக்கக் கூடிய பக்குவம் இந்த வயதில் கிடைக்கும். ஜெயா டி.வி.யும் இனி எந்த ஆட்சி வந்தாலும், அதை எதிர்கொண்டு தைரியமாக வளருகிற சேனலாக இருக்கும். குறிப்பிட்ட எந்த சார்பும் கொண்ட சேனலாக இல்லாமல் எல்லா தரப்புகளையும் நடுநிலையாக பார்க்கக் கூடியவாறு நம்மை மாற்றிக் கொள்வோம்.” என்று பேசினாராம். அதாவது, இனி இந்த சேனல் அ.ம.மு.க.வின் சேனலாக பிராண்ட் செய்யப்பட மாட்டாது! என்பதே அவரின் உட்கருத்து.

இதன் ஆடியோ ரெக்கார்டை ஜெயா சேனலில் பணிபுரியும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் அப்படியே அவருக்கு அனுப்பியிருக்கின்றனர். அதைக்  கேட்டு கொதித்தவர் ‘இனியும் இந்த பையன இங்கே வெச்சிருந்தால் நமக்கு சரியா இருக்காது.’ என்று கொதித்தாராம். சசிகலாவை பெங்களூரு சிறையில் பார்க்கச் சென்ற மனிதரின் மூலமாக அவரது கவனத்துக்கு கொண்டு சென்றவர், ”அம்மாவும் நீங்களும் கஷ்டப்பட்டு  உருவாக்குன சேனல்ல நம்ம துரோகிகளின் செய்தியையும், எதிரிகளின் செய்தியையும் ஒளிபரப்ப தயாராகிட்டார். இன்னும் இவர் இந்த பொறுப்பில் இருப்பது சரியா?” என்று கேட்டிருக்கிறார். 

சசியும் எல்லாவற்றையும் கேள்விப்பட்டபின், விவேக் மீது வருத்தம் காட்டியிருக்கிறார். விரைவில் ஜெயா சேனல் குழுமத்திலிருந்து விவேக்கிற்கு பிரியா விடை கொடுக்கப்படலாம்! என்கிறார்கள். அதன் நிர்வாகம், தினகரனின் மனைவி அனுராதாவுக்கு கைமாறலாமாம்!