அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். மேலும், சட்டமன்றத்தில் விரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்படும் எனவும் அவர், தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியை கலைக்க வேண்டும் வேண்டும் பலரும், அரசுக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார்கள். ஆனால், அதிமுக அரசு எவ்வித அச்சமும் இல்லாமல், துரிதமாகவும், சுதந்திரமாகவும் செயல்படுகிறது.

அரசுக்கு துரோகத்தை இழைத்துவிட்டு சிலர், ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள். இது ஒரு போது நடக்காது. அதிமுகவில் பொது செயலாளர், துணை பொது செயலாளர் என்ற பதவியே கிடையாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால், மற்றவர்கள் என்ன பட்டியலை வெளியிட்டாலும், பலருக்கு பொறுப்புகளை வழங்கினாலும் அது செல்லாதது. அவர்களது பதவியே கேள்வி குறியாக உள்ளது. இதில், மற்றவர்களை அவர்கள் நியமனம் செய்வது கேலி கூத்தானது.

அதிமுக என்பது இமயமலை போன்றது. எஃகு கோட்டையாக செயல்பட்டு வருகிறது. இதில் இருந்த சிலர் பிரிவதால், கவிழ்த்து போடுவதற்கு மண் சட்டி இல்லை. எஃகு கோட்டை. இதை யாராலும் அசைக்க முடியாது.

ஓ.பன்னீர்செல்வம் 18ம் தேதி, அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவால் அடையாளம் கட்டப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அவரே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், ஜெயலலிதாவுக்கு அவர் செய்யும் துரோகம். இதை அவரது ஆன்மா மன்னிக்காது.

ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.ஒரு சில காரணங்களால், அந்த நிகழ்ச்சி தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. விரைவில் சட்டமன்றத்தில், ஜெயலலிதாவின் புகைப்படம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.