தமிழக அரசிற்கு வரவேண்டிய வருவாயைவிட மக்களின் உயிர் மற்றும் உடல் முக்கியமானது என்பதை உணர்ந்து, மதுபான கடைகளைத் திறக்க வழங்கப்பட்ட அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசை ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார். 

மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில் தமிழகத்தில் வரும் மே 7ம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், அரசு மதுபானக் கடைகளைத் திறப்பதால் மது அருந்துபவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாது. மேலும் மது அருந்திவிட்டு சாலையிலேயே விழுந்து கிடப்பதும் அதிகரிக்கும். கடந்த 40 நாட்களாக மூடிக்கிடக்கும் மதுபானக் கடைகளால் பலர் மதுப் பழக்கத்திலிருந்து மீண்டு குடிப் பழக்கத்தை மறந்து வருகின்றனர். ஏற்கனவே ஊரடங்கினால் வருமானம் இல்லாமல் ஒருவேளை உணவுக்காக ஏழை மக்கள் திண்டாடும் இவ்வேளையில் மதுக்கடைகளைத் திறந்துவிடுவதால் பல குடும்பங்கள் உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் சூழல் உருவாகும்.

கொரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக ரூ.1000த்தை கொடுத்த தமிழக அரசு, அதனை வட்டியுடன் வசூலிக்கவே மதுபானக் கடைகளைத் திறக்கிறது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது. இந்த இக்கட்டான சூழலில் மதுக் கடைகளைத் திறந்தால் கொரோனாவல் பலியாகும் உயிர்களை விட மதுவால் பல உயிர்களும், பட்டினியால் பல உயிர்களும் பலியாகும்.

எனவே, தமிழக அரசிற்கு வரவேண்டிய வருவாயைவிட மக்களின் உயிர் மற்றும் உடல் முக்கியமானது என்பதை உணர்ந்து, மதுபான கடைகளைத் திறக்க வழங்கப்பட்ட அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.