நீட் தேர்வை புதை குழிக்கு அனுப்பும் வரை ஓயமாட்டோம் என திருச்சியில் எதிர்கட்சிகள் சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  பங்கேற்றுப் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , மருத்துவக் கனவுகளோடு வாழ்ந்த ஆயிரக்கணக்கான அனிதாக்கள் இருக்கிறார்கள். அவர்களின் கனவுகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கும் திட்டம் இந்த நீட் தேர்வு என கூறினார்.

இந்த நீட் தேர்வை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சுகாதார வசதியை பார்க்க முடியாது. பிறந்த குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துபோகும், சாதனைக்குரிய ஆதித்யநாத் ஆட்சிதான் அவர்களின் ஆட்சி என குற்றம்சாட்டினார்..

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. பாஜகவுக்கு சவால் விடுகிறோம், இதில் 10 விழுக்காடு கல்லூரிகளைக் கூட நீங்கள் ஆளும் மாநிலங்களில் ஏற்படுத்த முடிந்ததா? என தெரிவித்தார்.

நீட் வந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றால், நம் கிராமப்பறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ வசதிகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்காத நிலை வரும் என்றார்.

எனவே நீட் தேர்வை புதைக்குழிக்கு அனுப்பும் வரை ஓய மாட்டோம் என்றும்,  இந்த நீட் தேர்வை எதிர்த்து போராடுவதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றும் ஜவாஹிருல்லா கூறினார்..