ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ மன்வேந்திரா காங்கிரஸ் கட்சியில் இணைவது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பார்மர் ஷியோ தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் மன்வேந்திரா சிங். இவர் கடந்த மாதம் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் மேலிடத்துடன் அதிருப்தி ஏற்பட்டு விலகுவதாக அறிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் மாநிலத்தில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் இல்லை, ஆதலால், தாமரை சின்னத்தில் நின்று போட்டியிட்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என்று கூறி பாஜகவில் இருந்து மன்வேந்திரா விலகினார். இதையடுத்த  காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக மன்வேந்திர சிங் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.

மன்வேந்திராவின் இந்த முடிவு ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை அதிகமாகப் பெற்றுத்தரும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அதேசமயம், அரசியல்ரீதியாக மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் மன்வேந்திரா, ஆனால், இவரின் முடிவு ஆளும் கட்சிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பாஜக நம்புகிறது.

ஆனாலும் ராஜஸ்தானில் மன்வேந்திரா சிங்  பாஜகவில் இருந்து விலகியிருப்பது பாஜகவுக்கு பெரும பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது

பார்மர் தொகுதியில் வலிமையாக இருக்கும் ரஜபுத்திர சமூகத்தினர் பாஜகவின் அரசால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாகவே மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரம்பரிய ரஜபுத்திரர்கள் வாக்குகள் பாஜகவுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்பது சந்தேகமே என்கின்றனர். ஏற்கனவே ஜஸ்வந்த் சிங் பாஜகவுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில் தற்போது அவரது மகனும், பாஜகவில் இருந்து விலகி இருப்பது பாஜக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.