மறக்கப்பட்ட முதலமைச்சர் ! கண்டுகொள்ளாத அதிமுக !! எம்ஜிஆரின் மனைவிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள் !!
அரசியல் மற்றும் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாளான கடந்த 19 ஆம் தேதி அவரது உறவினர்கள் மட்டும் நாளிதழ் ஒன்றில் மிகச்சிறிய அளவில் நினைவு நாள் படத்தை வெளியிட்டிருந்தனர். அதிமுக என்ற சாம்ராஜ்யத்தின் மிகப் பெரிய ஆளுமையாக இருந்த ஜானகிக்கு ஏற்பட்ட இந்த நிலையை எண்ணி அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
அதிமுக என்னும் பிரமாண்டமான கட்சியைத் தொடங்கியவர் எம்ஜிஆர். கருணாதிக்கு எதிராக திமுகவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார்.
அவர் உயிருடன் இருந்தவரை அதிமுகவின் அசைக்கமுடியாத ஆளுமையாக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுத் திரும்பினார்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோதும், மருத்துவமனையில் இருந்தபோதும் அவரை கவனித்துக் கொண்டவர் அவரது மனைவி ஜானகி எம்ஜிஆர். ஆனால் எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு கடும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஜானகி முதலமைச்சரானார்.
ஆனால் ஜெயலலிதா – ஜானகி இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில் ஜானகி விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானர்.
இந்நிலையில்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ஜானகி எம்ஜிஆர் காலமானார். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜானகியின் நினைவு நாள் கடந்த 19 ஆம் தேதி வந்தபோது, அவரின் உறவினர்கள் லதா ராஜேந்திரன், செல்வி ராஜேந்திரன் மற்றும் குமார் ராஜேந்திரன் ஆகியோர் மட்டும் நாளிதழ் ஒன்றில் மிகச் சிறிய அளவில் அவருக்குகாக விளம்பரம் செய்திருந்தனர்.
ஆனால் தங்கள் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரின் மனைவியை எந்த ஒரு அதிமுகவினரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
காலம் எல்லோரையும் மறக்கச் செய்யும் என்பது உண்மை என்றாலும் கூட, அரசியலில் இன்று அவரால் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்திருக்கும் எந்த அதிமுகவினரும் ஜானகி எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.