உத்தரப்பிரதேசத்தில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் தப்லீக் ஜமாத் அமைப்பினர், செவிலியர்களை தாக்கியதாகவும், நிர்வாணமாக நின்றதாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு காஜியாபாத் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அங்குள்ள செவிலியர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில், ‘தப்லீக் ஜமாத்தினர் உத்தரவை பின்பற்ற மாட்டார்கள். அவர்கள் மனித இனத்திற்கே விரோதிகள். நர்சுகளுக்கு எதிராக அவர்கள் செய்திருப்பது கொடுங்குற்றம். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர்கள் தாக்கப்பட்டதைப் போன்ற சம்பவம் நாட்டில் வேறு எங்கேயும் நடந்து விடக் கூடாது. சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

காஜியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனையில் தப்லீக் ஜமாத் அமைப்பினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த மருத்துவமனையில் தலைமை அதிகாரி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தப்லீக் அமைப்பினர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், பீடி சிகரெட்டுகளை கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸை பரப்பும் வகையில் அவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி மாநாட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 136 பேர் கலந்து கொண்டுள்ளனர்.


டெல்லி தப்லீக் மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,103 பேர் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 309 ஆக உள்ளது. அவர்களில் 264 பேர் தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,300-யை தாண்டியுள்ளது. 56 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.