மோடி அதிமுக எம்பிக்களை சந்திக்க மறுப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார் .

இது குறித்து அளித்த பேட்டியில்,

ஜல்லிக்கட்டு பிரச்சனை தீர உடனடியாக அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டி ஜனாதிபதியை சந்தித்து எங்கள் கோரிக்கையை மனுவாக அளித்துள்ளோம்.

எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்துகொண்டிருக்கிற அண்ணாவின் வழியில் செயல்படுகிறோம். தமிழக கலாச்சாரம், பண்பாடு காக்கப்பட வேண்டும். அதற்கு போராடுகிற அத்தனை கொள்கைகளையும் கொண்ட இயக்கம் அதிமுக.

ஜல்லிக்கட்டு பிரச்சனையை அம்மா அவர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் செயல்படுத்த மத்திய அரசை அணுகினார்கள். அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசை அணுகி முயற்சித்தார்கள்.

தமிழக அரசு ஏன் காலந்தாழ்த்தியது என்ற காரணம் கேட்கலாம். பலதடவை அம்மா அவர்கள் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கோரிக்கை வைத்தார். உடனடி தீர்வை காங்கிரஸ் அரசு செய்திருக்க வேண்டும் செய்ய வில்லை , பாஜக அரசும் செய்ய முன்வரவில்லை.

அதனால் தான் அதிமுக அரசு நேரடியாக தலையிட்டு இந்த முயற்சியை எடுத்துள்ளோம். கூட்டாட்சி தத்துவம் என்றால் மொழி , கலாச்சாரம் , உணர்வை பாதுகாக்க வேண்டும். அதுதான் கூட்டாட்சி தத்துவம். ஒரு மொழி , ஒரு கலாச்சாரம் அல்ல.

இதை செய்யாத்தால் தான் இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள் , இந்த போராட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 இந்தியாவில் எத்தனையோ மொழிகள் , வித விதமான கலாச்சாரம் உள்ளது என்பதை மறக்க கூடாது. ஒரு மொழி , ஒரே கலாச்சாரம் என்று வந்தால் இது போன்ற போராட்டங்கள் வெடிக்கும் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

திமுக 18 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கண்டார்களா? , ஆட்சியில் இருந்த போது செய்து முடிக்க வேண்டும் . அப்போதுதான் மக்கள் நம்புவார்கள்.

இதை செய்யாததால் தான் மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள்.மக்கள் நம் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் செயல்படணும். அவசர சட்டம் கொண்டு வரசொன்னோம் ஆனால் பாஜக அரசு செய்யவில்லை. தற்போது அதற்கு உதவிசெய்துள்ளார்கள் அதை மறுக்கவில்லை. 

பாரத பிரதமர் தமிழர்களின் உணர்வுகளை , கலாச்சாரத்தை மதிப்பதாக கூறியுள்ளார். மதிக்கிறோம் ஆனால் காவிரி பிரச்சனையை , கச்சத்தீவு பிரச்சனையை , முல்லைப்பெரியாறு பிரச்சனையை மதியுங்கள் , இலங்கை பிரச்சனையை மதியுங்கள், தமிழக பிரச்சனையை மதியுங்கள்.

இன்று வரை மூன்று நாட்களாக பிரதமரை சந்திக்க்க காத்து கிடக்கிறோம் , அனுமதி கிடைக்கவில்லை. மக்கள்பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார். நான் துணை சபாநாயகற் அவர் பிரதமர் என்பது வேறு விஷயம். ஆனால் மக்கள் பிரச்சனைக்காக வருகின்ற பிரதிநிதிகளை சந்திக்கவேண்டும் அல்லவா?

கச்சத்தீவு பிரச்சனைக்கு வந்தோம் சந்திக்கவில்லை, காவிரி பிரச்சனைக்கு வந்தோம் சந்திக்க வில்லை , முல்லை பெரியாறு பிரச்சனைக்கு வந்தோம் சந்திக்க வில்லை, எதற்கும் சந்திக்க மறுப்பது சரியல்ல.

இப்போது அவசர சட்டத்திற்கு பிரதமர் அவர்கள் அமைச்சர்கள் உதவி இருக்கிறார்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு தம்பிதுரை பேசினார்.