ஜல்லிகட்டுக்கு ஆதரவாக அறிக்கை விடுவதாக கூறி 14 மணி நேரம் ஆகியும் கிணற்றில் போட்ட கல்லாக தமிழக அரசு இருப்பதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் முதல்வர் ஓபிஎஸ்க்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து தங்கள் கோபத்தை தீர்த்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கோபாவேச போராட்டம் கிளர்ந்துள்ளது.
லட்சகணக்கான இளைஞர்கள் தன்னேழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைநகர் சென்னையில் சிறுபொரியாய் வெறும் 200 பேர் மட்டுமே ஆரம்பித்த இளைஞர் கூட்டம் அரசின் அலட்சியம் காரணமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரளும் போராட்டமாக மாறியுள்ளது.
நேற்றிரவு 10,000 எண்ணிக்கையில் இருந்த இளைஞர்கள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று கொள்வதாகவும் விரைவில் அதற்கான அறிக்கையை முதல்வர் வெளியிடுவார் என்று தெரிவித்ததை ஏற்று கொள்ளாமல் முதலில் அறிக்கை வெளியிடுங்கள் பிறகு கலைந்து செல்கிறோம் என்று அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
சரி என்று ஒத்துக்கொண்டு போய் 15 மணி நேரம் கடந்த பின்னரும் அரசு தரப்பில் ஒரு அசைவும் இல்லை.

நாடே பற்றி எரியும்போது தலைநகர் சென்னையில் 1 லட்சம் இளைஞர்கள் போராடி கொண்டிருக்கும் போது அறிக்கை தயாரிக்கிறேன் என்று கிளம்பிய முதல்வர் +2 மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
இதையெல்லாம் பார்த்த இளைஞர்கள் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்தனர்.
மெரீனாவில் பல இடங்களில் ஓபிஎஸ்சுக்கு பாடை கட்டி ஒப்பாரி வைத்து தூக்கி சென்றனர்.
