jail officials to provide fan attached bath room bed facilities for Sasikala

அமரர் ஆன நொடியிலிருந்து ஜெயலலிதா மீதிருந்த பயம், விசுவாசம், நன்றியுணர்வு என எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு அடுத்த தலைமையின் காலடி தேடி அ.தி.மு.க.வினர் ஓடிய காட்சி சந்தர்ப்பவாத சில்லரைத்தனத்தின் உச்சம். 

அதிலும் சொத்துகுவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பின்படி சசிகலா சிறை சென்றபோது ”அம்மாவுக்காக எதையெல்லாமோ இழந்த சின்னம்மா இன்னைக்கு சிறைத்தண்டனையையும் தானே ஏத்துக்கிட்டு தியாகியாகி இருக்கிறாங்க.” என்று சில வி.ஐ.பி. நிர்வாகிகளே ஓலமிட்ட காட்சி ஜெயலலிதா ஆத்மாவின் காதுகளில் நாராசமாய் ஒலித்திருக்கும்.

ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் ”எங்களுக்கு வாழ்க்கை பிச்சையிட்ட தாயே! குடும்ப தலைவியே! உங்கள் கரம் பட்டதால் நாங்கள் பிள்ளையார், இல்லாவிடில் வெறும் சாணிதான்! நன்றியுணர்வில் நாயினும் கீழாக உங்களிடம் பணிகிறோம்.” என்றெல்லாம் அமைச்சர்களும், எம்.பி.க்களும், மா.செ.க்களும், எம்.எல்.ஏ.க்களும் அடிபணிந்து அரற்றியது எல்லாமே கடைந்தெடுத்த பொய்தானே. அரசியலின் அடிநாதமே சுயநலம் தான். ஆனால் அதற்காக ஒரு மெல்லிய கோடு அளவில் கூட அ.தி.மு.க.வினருக்கு ஜெ.,விடம் நன்றியுணர்வில்லாமல் போனதுதான் அவலம். 

இது ஒரு புறமிருக்கட்டும். தியாகி சசிகலா சிறைக் கொட்டடியில் என்னென்ன கொடுமைகளையெல்லாம் அனுபவிக்கிறார் தெரியுமா?...என்று சசி அணி அ.தி.மு.க.வினர் உருகி மருகியதெல்லாம் உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கலாம். ஆனால் சசிக்கு அப்படி எந்த சிக்கலுமில்லை, சகல வசதிகளுடன் மிக சந்தோஷமாக இருக்கிறார் என்பதை சசியின் வார்த்தைகளும், அவரை கண்டுவிட்டு வந்த எம்.எல்.ஏ.க்களின் வார்த்தைகளுமே போட்டுடைத்திருக்கிறது. 

ஒரு வாரத்துக்கு முன்பாக சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சசியை பெங்களூரு சிறையில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கின்றனர். அவர்களில் சிலர் சிறையில் சசியின் இருப்பு சூழல் பற்றி வெளிப்படையாக விவரித்திருக்கின்றனர். 

அவர்களில் ஒருவரான அரூர் எம்.எல்.ஏ. முருகன் “நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில இருக்கிறதாலே சின்னம்மா சோர்வா இருப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா களையான முகத்தோடே வந்தமர்ந்தாங்க. ”அம்மா (?!) நல்லா இருக்கீங்களா?”ன்னு நாங்க கேட்கிறதுக்கு முன்னாடியே அவங்க எங்களை நலம் விசாரிச்சாங்க. 

‘நீங்க எப்படியிருக்கீங்க, இங்கே என்ன மாதிரியான வசதிகள் இருக்குது?’ன்னு கேட்டோம். உடனே சின்னம்மா உற்சாகமாக “நான் நல்லா இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. மூணு வேளையும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி நல்ல சாப்பாடு கொடுக்கிறாங்க. என்னோட ரூம்ல பெட், ஃபேன், டி.வி. எல்லாமே இருக்குது. இங்கே இருக்கிற சிறை பாதுகாவலர்கள் எங்களை நல்லா பார்த்துக்கிறாங்க.” அப்படின்னு சொன்னாங்க. 

சின்னம்மாவின் முகத்தை பார்க்கிறப்ப கார்டன்ல இருக்கிறப்ப எப்படி நிம்மதியா, தேஜஸா இருப்பாங்களோ அப்படியே களையா இருந்தாங்க. நாங்க பேச்சிட்டிருக்கிறப்பவே சிறைத்துறை அலுவலர்களை பார்த்து “இவங்களுக்கு டீ கொடுங்க.”ன்னு சின்னம்மா சொன்னாங்க. உடனே அவங்களும் போய் டீ போட்டுட்டு வந்து எங்களுக்கும், சின்னமாவுக்கும் கொடுத்தாங்க. சின்னம்மாவோட அமர்ந்து டீ குடிக்கிற பாக்கியம் இந்த எளிய தொண்டனுக்கும் கிடைச்சது பெரிய பாக்கியம்.” என்று பூரித்தும், சிலாகித்தும், மெர்சலாகியும் பேசியிருக்கிறார். 

இவர் மட்டுமில்லை முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனும் “சின்னம்மா ஆரோக்கியமாவும், தெளிவாவும் இருக்கிறாங்க. அவரோட உடல்நலம், சாப்பாடு முறைகளை விசாரிச்சோம். நன்றாக இருப்பதா சொன்னாங்க. உண்மையிலேயே தைரியத்தோடு இருக்கிறாங்க.” என்று சொல்லியிருப்பவர், சசி சில அரசியல் ஆலோசனைகளை தங்களிடம் கூறி அனுப்பியதாக காலர் தூக்கிவிட்டிருக்கிறார். 

ஆக சிட்டிங் எம்.எல்.ஏ. மாஜி அமைச்சர் கம் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆகியோரின் வார்த்தைகளை வைத்து பார்க்கும் போது சிறையில் சசிகலா சகல செளகரியங்களோடே இருப்பது புலனாகிறது. குற்றவாளியாக சுப்ரீம் கோர்ட்டாலேயே அறிவிக்கப்பட்டு சிறை சென்றவருக்கு இப்படியான வாழ்க்கை எப்படி சாத்தியம்? என்று இந்த இடத்தில் கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

என்னதான் ஒரு பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் என்ரு சசிகலா தன்னை இப்போது அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவரொன்றும் அரசியல் கைதியல்ல சிறையில் பல வசதிகளைப் பெற. அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக ஒரு முதல்வர் சொத்து சேர்த்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி. (சொல்லப்போனால் ஜெ., இல்லாத நிலையில் இவரே முதல் குற்றவாளி.) கூட்டுச் சதியில் ஈடுபட்டவர், ஆதாரங்களை அழித்தவர், தங்களை குற்றமற்றவராக காண்பிக்க பல பொய்யான ஆதாரங்களை உருவாக்கியவர்...இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு இப்படியான வாழ்க்கை சிறையில் எப்படி சாத்தியமாக்கப்பட்டுள்ளது?

போயாஸ் கார்டனில் தீபா ஆடிய ஆட்டத்தின் பின் தீபக் அளித்த பேட்டியின் போது ’இங்கே நடக்குற எல்லாமே சசி அத்தைக்கு உடனுக்குடன் தெரிஞ்சுடும்.’ என்று சொல்லியிருந்தார். இதை அப்போதே நமது நியூஸ் ஃபாஸ்ட் இணையதளம் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தது. ஆனால் அதற்கான பதில் இப்போது எம்.எல்.ஏ.க்கள் மூலமாக ஆதாரப்பூர்வமாக கிடைத்துவிட்டது. 

இப்படி வாழ்வது சாத்தியமென்றால் சசியை ஏன் சிறையில் வைத்திருக்க வேண்டும்? வெளியிலேயே விட்டுவிடலாமே, சிறைத்துறைக்கு செல்வாகும் மக்கள் வரிப்பணமாவது மிஞ்சுமே! என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி. 

அவர்கள் இன்னும் இது குறித்து பேசுகையில்...”வறுமையின் தூண்டுதலில் கடைகளில் சேலையை திருடும் பெண்களுக்கு இந்த தேசத்தின் போலீஸ் கொடுக்கும் அடையாளமும், சிறையில் அவர்கள் படும் துயரமும் அடுக்க மாட்டாது. ஆனால் மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கோடான கோடி குவித்துக் கொட்டி ராணி வாழ்க்கை வாழ்ந்தவருக்கு சிறைக்குள் அமோக வாழ்க்கையா? அப்படியானால் இந்த நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை அப்படித்தானே!

இந்தியாவில் லஞ்சம் அதிகம் விளையாடும் மாநிலங்களில் கர்நாடகா முக்கியமானது என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த அடிப்படையில் கர்நாடக மாநில சிறைத்துறை சசி டீமிடம் ஆதாயம் பெற்றுக் கொண்டு அவரை சிறைக்குள் நிம்மதியாக வாழ அனுமதிக்கிறது என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த தேசத்தை நிர்வகிக்கும் மத்திய அரசுக்கு சிறைக்குள் சசியின் நிலை பற்றி லைவ் ரிப்போர்ட்டே எடுக்க முடியும். ஆக அவர்களும் இந்த ஏகபோகத்தை அனுமதிக்கிறார்கள் என்றால்...எல்லோருமே கூட்டுச்சதிதான் செய்கிறார்களா! மக்கள்தான் ஏமாளிகளா?” என்று கேட்கிறார்கள். 
இந்த கேள்விக்கு யார் விடை சொல்வது?