இந்நிலையில் 'ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என தமிழக செய்தித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.  

ஜெய்பீம் திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கத்தினர் வைத்த கோரிக்கையில் நியாயம் இருந்தால் அதை பரிசீலிப்போம் என தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கூறியுள்ளார். ஜெய்பீம் பட விவகாரத்தில் தொடர்ந்து தமிழக அரசு மவுனம் காத்து வந்த நிலையில், முதல்முறையாக அமைச்சர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள வட மாவட்டங்கள் சூர்யாவுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் பரிசு என்று பாமக மாவட்ட செயலாளர் பேசி இருப்பது வன்முறையை தூண்டும் செயல் என பலரும் கண்டித்து வருகின்றனர். சூர்யா- பாமக மோதல் என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபக்கம் ஜெய் பீம் திரைப்படம் நாடு, மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெய் பீம் திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்றும் அத்தனை விருதுக்கும் இது தகுதியான படம் என்றும் பலரும் ஜெய்பீது படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக மற்றும் வன்னியர் சங்கம், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வலியுறுத்தி மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர், மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது. இது சூர்யா மற்றும் படக்குழுவுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் 'ஜெய் பீம் ' திரைப்படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கக் கூடாது என்ற வன்னியர் சங்கத்தின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம் என தமிழக செய்தித் துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் காமராசர் அவர்களின் நினைவில்லத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 

'ஜெய் பீம் ' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த படத்திற்கு விருது வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கூடாது என வன்னியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இப்பட பிரச்சனை தொடர்பாக முதல்வருடன் கலந்துபேசி சுமூகமான சூழலை ஏற்படுத்துவோம். வன்னியர் சங்கத்தின் கோரிக்கை நியாயமாக இருந்தால் பரிசீலிப்போம் , அதே வேளையில் திட்டமிட்டு சுமந்தப்படும் குற்றச்சாட்டு என்றார் நிராகரிப்போம் என்று அவர் கூறினார்.