சசிகலா சிறைக்கு சென்ற நாள் முதல், பெங்களூரிலேயே தங்கி இருந்து தினமும் அவரை சந்தித்து வருகிறார் இளவரசியின் மகன் விவேக்.

அப்படியே சென்னைக்கு வந்தாலும், மறுநாள் அதிகாலையிலேயே விமானம் மூலம் அவர் மீண்டும் பெங்களூரு சென்று விடுகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தினகரன் மேல் உள்ள கோபத்தால், சசிகலாவை சந்திப்பதை தவிர்த்து வந்த, அவரது சகோதரர் திவாகரன், தமது மகன் மூலம் சசிகலாவிடம் புகார் சொல்ல ஆரம்பித்துள்ளார்.

அதற்காக, விவேக்கை போல, தமது மகன் ஜெய் ஆனந்தையும்  சில நாட்கள் பெங்களூரில் தங்கி சசிகலாவின் மனதை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதை ஏற்று, அவர் மகன் ஜெய் ஆனந்தும் கடந்த சில நாட்களாக விவேக்குடன் தங்கி, அவருடனே சென்று தினமும் சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார்.

ஜெய் ஆனந்த் சிறைக்குள் சென்று சசிகலாவை பார்க்கும்போதெல்லாம், தினகரனைப் பற்றி மெல்ல மெல்ல வெறுப்பை உருவாக்கும் வகையில் சசிகலாவிடம்  புகார் பட்டியல் வாசித்து வருகிறார்.

நாங்கள் சொல்வது எதையும் தினகரன் காது கொடுத்து கேட்பதில்லை. தந்தை சில வேலைகள் கொடுத்தும், அமைச்சர்கள் அதை தட்டிக் கழித்து வருகின்றனர்.

அதையும் மீறி கேட்டால், தினகரனிடம் கேளுங்கள் என்று திமிராக பதில் சொல்கிறார்கள் என்றும் சசிகலாவிடம் வருத்தப்பட்டுள்ளார் ஜெய் ஆனந்த்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால், கூடிய விரைவில்   ஒட்டுமொத்த கட்சியும் அவரது கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்.

நம் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி இருக்க வேண்டும் என்று தானே தினகரனை துணை பொது செயலாளராக ஆக்கினீர்கள்.

ஆனால், அவர் கட்சியை பலப்படுத்துவதற்கு பதிலாக, தம்மை பலப்படுத்திக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.

நீங்கள் இருந்தவரை சின்னம்மா சின்னம்மா என்று பூனை குட்டி போல உங்களை சுற்றி வந்தவர்கள் யாரும், தற்போது உங்கள் பெயரை சொல்வது கூட இல்லை.

நீங்கள் சிறைக்கு வந்த ஒரு மாதத்திலேயே நிலைமை இப்படி தலை கீழாக மாறி இருக்கிறது என்றால், அடுத்தடுத்து எப்படி மாறும் என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று சசிகலாவிடம் கூறியுள்ளார். 

இதையெல்லாம் கேட்டு டென்ஷன் ஆகும் சசிகலாவை, விவேக்தான் அவ்வப்போது சமாதானம் செய்து வருகிறாராம்.