மாணவர்கள், பெற்றோர்கள் மனஉளைச்சலை போக்கவே இந்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. ஆனாலும் தமிழக அரசுக்குப் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. 

அரசு ஊழியர்கள் -ஆசிரியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் வேலை நிறுத்தப்போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளைவ வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். அவர்களை திருப்பி வேலைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தது. 400கும் மேற்பட்ட ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, இன்று சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் உயர்மட்டகுழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போராட்டத்தை கைவிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கோரிக்கையினை ஏற்று, போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் தலைவர் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்த போராட்டமும், தலைமை செயலக ஊழியர்கள் போராட்டமும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டத்திற்கு பிறகு பேசிய அந்த அமைப்பினர், ‘ எங்களது கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் அழைத்து பேசவில்லை.பிப்ரவரி மாதம் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருப்பதாலும் பெற்றோர், மாணவர்களின் நலன் கருதியும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்றும் அனைத்து கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்றும் இந்தப்போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். போராட்டியவர்கள் மீது 17 -எ, 17-பி, 17-இ பிரிவுகள் வரை நடவடிக்கையும், போராட்டியவர்களின் பணியிடங்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 

பலர் சிறை நடவடிக்கைகளுக்கு ஆளாகி உள்ளனர். எனவே போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களின் மீதான வழக்குகளையும், நடவடிக்கைகளையும் திரும்பப்பெற வேண்டும். போராட்டத்திற்கு முன்பு இருந்த நிலையைப் போலவே ஆசிரியர்களை வழி நடத்த வேண்டும் நியாயமான தீர்வு காணவேண்டும். இந்தப்போராட்டம் தற்காலிகமானது தான்’’ என அவர்கள் தெரிவித்துள்ளனர்.