பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.  தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சமூக வலை தளங்களில் சிலர் கடுமையாக விமர்சனர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒருவர், வாட்ஸ் அப்பில் ஆசிரியர்களை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் சுயநலத்துக்காக போராடி வரும் ஆசிரியர்களால் எங்களது குழந்தைகளின்  படிப்பு பாழாவதாக தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களுக்கு எதற்கு பென்சன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், விவசாயிகள், கட்டடம் கட்டும் தொழிலாளர்கள், கழிவறை சுத்தம் செய்பவர்கள் எல்லாம் பென்சன் வேண்டும் என்றா கேட்கிறார்கள் ?என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களே அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. செமையா சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்  தங்கள் பணத்தை வட்டிக்கு விடுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.