காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று 4ஆவது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட சென்றனர். அப்போது காவல் துறையினர் அந்த வளாகத்தின் அனைத்துக் கதவுகளை மூடினர். ஆனால் ஊழியர்கள் காவல் துறையின் தடுப்பையும் மீறி காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  ஆயிரக்கணக்கானோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து நேற்று அரவு  ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்பாளர்களை மட்டும் ரிமாண்ட் செய்தனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டதலைவர்களை குறி வைத்து ஒரே நேரத்தில் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றனர்.பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்து அடக்குமுறையை ஏவியிருப்பதால் ஆசியர்கள், அரசு ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.