ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார்.  இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த பேரவையை தொடங்கினார். முதலில் அவர் தமிழக மக்களிடையே மாஸ் காட்டினாலும் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் அவருக்கு இருந்த செல்வாக்கு முற்றிலுமாக குறைந்து போனது. 

இந்நிலையில் திடீரென பொதுவாழ்க்கையில் இருந்து முழுமையாக விலகுகிறேன் என்றும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என முகநூலில் பதிவிட்டார். இந்த நிலையில் ஜெ.தீபா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
அதில்  என்னை சுற்றி ஏமாற்றி வந்து, என்னை தனிமைப்படுத்தி, பல துன்பங்களுக்கு ஆளாக்கி மிகப்பெரிய சூழ்ச்சியை செய்த நபர் ராஜா. ராஜாவுக்கு இங்கு அலுவலகப் பணி கொடுத்து நான் வைத்திருந்த காலத்தில் அவர் எனக்கு தெரியாமல் செய்த பலவித தவறான காரியங்களால் நான் நடத்தி வந்த பேரவைக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 

ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அதிகாரப்பூர்வ தகவலை காவல்துறையிடமும் கொடுக்க உள்ளேன் என அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.