ஜெ. மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சிபிஐ விசாரித்தால் சிறப்பாக இருக்கும்என்றும், வேதா இல்லத்தை நினைவில்லமாக ஆக்கும் அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

பிளவுபட்ட அதிமுக அணி, இணைவதற்கான முயற்சிகள் இரண்டு அணியினராலும் மேற்கொள்ளப்பட்டன. ஓ.பி.எஸ். அணியினர், அணி இணைப்பு குறித்து பேசும்போது, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், ஜெ. வாழ்ந்த இல்லமான வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா. பாண்டியராஜன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். மாஃபா. பாண்டியராஜன், முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கே.பி. முனுசாமி, தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கும்போது, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சிபிஐ விசாரித்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

மேலும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கோரி வருகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினரை முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் கே.பி. முனுசாமி வலியுறுத்தி உள்ளார். ஜெ. வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக ஆக்கும் அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.