ஜெயலலிதா மனதில் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியும் என்றும், தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு ஜெயலலிதா தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவேன் என்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி. நாகராஜன் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்கு பிறகு, எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதன் பின்னர், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி தரப்பினர், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியை தவிர்ப்பதற்காக புதுவையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை, டிடிவி தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக எம்எல்ஏ தங்க தமிழ் செல்வன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி. நாகராஜன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் தரப்பை ஒதுக்கி வைக்க முடியாது என்றும் அவர்களின் ஆதரவு தேவை என்றும் கூறினார்.

அதிமுக பொது செயலாளர் சசிகலா கட்சிக்காக தியாகம் செய்துள்ளார். சசிகலா மூலமாகத்தான் எல்லாமே நடந்தது. சின்னம்மா இல்லாமல் இந்த கட்சியைக் காப்பாற்ற முடியாது என்று அனைவரும் கூறியது எனக்குத் தெரியும்.

ஜெயலலிதா மனதில் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியும், தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு ஜெயலலிதா தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவேன் என்றும் எம்.பி. நாகராஜன் கூறினார்.