திமுகவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக ஸ்டாலினுக்கு பக்கபலமாக சென்னையில் வலம் வந்தவர் முன்னாள் எம்எல்ஏ. ஜெ.அன்பழகன். இவர் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி மரணமடைந்தார். இவர் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர், சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என சென்னையை கலக்கி வந்தவர். தற்போது இவரது மறைவால் அவர் வகித்துவந்த எம்எல்ஏ பதவி, மாவட்டச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.

மறைந்த சேப்பாக்கம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் கலைஞரின் நெருங்கிய அரசியல் நண்பரான பழக்கடை ஜெயராமனின் மகன். இவருடைய மறைவுக்கு பிறகு ஜெ.அன்பழகன் தி.மு.க-வில் பகுதி செயலாளராக இருந்து படிப்படியாக தி.மு.க-வின் மாவட்ட செயலர் பதவியை எட்டிப்பிடித்தார். தி.மு.க மீது கொண்ட அதீத பற்றால் இவருடைய மகனுக்கு  கருணாநிதி என பெயர் சூட்டினார்.

 "அண்ணன் எப்ப சாவான் தின்னை எப்ப காலியாகும்" என்று காத்திருந்தது போல் ஜெ.அன்பழகன் தம்பி கருணாநிதி அந்த இடத்தை பிடிக்க திமுக தலைமையில் காய்நகர்த்தி வருகிறார். ஜெ.கருணாநிதி, தியாகராய நகர் கிழக்கு பகுதி திமுக செயலாளராக இருக்கிறார். முன்னாள் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர்.இவரும் அண்ணன் இருந்த மாவட்டச்செயலாளர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கும் மற்றும் அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கும் இடையே அவருடைய இடத்தை பிடிப்பதற்கு போட்டி ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சித்தப்பா - மகன் இடையே பதவி போட்டி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் இவர் தி.மு.க-வில் எந்த பொறுப்பிலும் இல்லாமல் இருக்கிறார். ஆனால், இவர் தந்தையின் இடத்துக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து உள்ளார் என கூறப்படுகிறது.


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தேர்தல் பணிக்கு வடக்கு மாவட்டச்செயலாளர் தேவைப்படுவதால் ஜெ.அன்பழகன் அன்பழகனுக்கான இடத்தை இருவரில் யாரை அமர்த்துவது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகிறார்கள்.