டி.டி.வி தினகரன் கட்சியுடன் நெருக்கம் காட்டியதால் தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு வளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவோ கிடுக்கிப்பிடி போட்டும் டி.டி.வி தினகரன் அணியில் பணப்புழக்கம் மட்டும் குறைந்த பாடில்லை என்பது தான் டெல்லியின் மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. 

தினகரன் செல்லும் இடத்தில் எல்லாம் கூட்டம் கூடுவதற்கு பணம் மிகப்பெரிய காரணம் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பணம் எப்படி வெளியே வருகிறது யார் மூலம் வருகிறது என்பது தான் டெல்லியால் கண்டுபிடிக்க முடியாத விஷயமாக இருந்தது. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஓ.பி.எஸ் – தினகரன் சந்திப்பு ரகசியம் அம்பலமானது. 

இந்த சந்திப்பிற்கு இருவருக்கும் நெருக்கமான ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் உதவியதும் தகவலாக கசிந்தது. அந்த தொழில் அதிபர் வைகுண்டராஜனாக இருக்கலாம் என்று கூட சந்தேகிக்கப்பட்டது. ஏனென்றால் ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார் வைகுண்டராஜன். இதே போல் ஓ.பி.எஸ் தரப்பிலும் வைகுண்டராஜன் நெருக்கம் காட்டி வந்ததும் அனைவருக்கும் தெரிந்தது தான்.

 

இந்த நிலையில் தான் வைகுண்டராஜன் தரப்பில் இருந்து தினகரன் கட்சிக்கு பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாக டெல்லிக்கு சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை போக்கிக் கொள்ளத்தான் வருமான வரித்துறை சோதனை என்கிறார்கள் டெல்லி பிரபலங்கள்.

ஆனால் சோதனையின் போது ஒத்துழைக்க மறுத்த காரணத்தினால் கிட்டத்தட்ட வீட்டிலேயே வைகுண்டராஜனை அதிகாரிகள் சிறை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.